Bloody Beggar Review: மாளிகையில் மாட்டிக்கொள்ளும் பிச்சைக்காரர்; ஸ்கோர் செய்கிறாரா கவின்?
Vikatan November 01, 2024 03:48 AM
உழைக்க சோம்பேறித்தனப்பட்டு மக்களிடம் நடித்து பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் யாசகன் ஒருவனுக்குத் திருட்டுத்தனமாக ஆடம்பர மாளிகை ஒன்றில் தங்கும் வாய்ப்பு கிடைக்க, அங்குச் சென்று தெரியாமல் மாட்டிக்கொள்கிறான். அந்த வில்லங்கமான வீட்டில் சொத்தைப் பிரித்துக்கொள்வதற்காக வரும் வாரிசுகள் இடையே சிக்கிக்கொள்ளும் அந்த யாசகன் என்ன ஆனான், அவனுக்குப் பின்னிருக்கும் பிளாஷ்பேக் என்ன என்பதே இந்த `பிளடி பெக்க'ரின் கதை.

ஜாலியாக யாசகம் கேட்கும் ஆரம்பக் காட்சிகளிலும் சரி, அந்த வீட்டில் மாட்டிக்கொண்டு பயத்தில் முழிக்கும்போதும் சரி, வெரைட்டி காட்டியிருக்கிறார் கவின். எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்து, எந்தக் குறையும் இல்லாமல் படத்தைத் தாங்கிப்பிடிக்கிறார். அந்த மாளிகையில் இருக்கும் 'ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்' என அவர்களே படத்தில் சொல்வது போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஹைப்பராகவே இருக்கிறார்கள். 'நெல்சன் சினிமாட்டிக் யூனிவர்ஸ்' என ஒன்று இருந்தால் அதில் அப்படியே செட்டாகிவிடும் கதாபாத்திரங்கள் அனைத்தும்! அப்படியான கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே பாதி கிணற்றைத் தாண்டிவிடுகிறார் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார்.

Bloody Beggar Review

மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன் என கதாபாத்திரங்களை ஏற்றவர்களும் படத்திற்கான மீட்டரில் சரியாக நடித்துச் சென்றிருக்கிறார்கள். 'போர்த்தொழில்' படத்தில் வில்லனாக நாம் பார்த்த மலையாள நடிகர் சுனில் சுகதா இதில் தனித்துத் தெரிகிறார். படத்தில் பேயாக வந்தாலும் நாம் பார்த்துப் பழகிய அதே ரெடின் கிங்ஸ்லிதான். ஆனாலும் நிறைய இடங்களில் அவரின் கவுன்ட்டர்கள் தியேட்டரில் ரசிக்க வைக்கின்றன.

படத்தின் முக்கிய பலம் அதன் தொழில்நுட்பக் குழு. அந்த மாளிகை ஏறத்தாழ படத்தின் ஒரு கதாபாத்திரம். கிட்டத்தட்ட அதற்குள்தான் பெரும்பாலான காட்சிகள் நடக்கின்றன. அதைச் சுவாரஸ்யப்படுத்தப் போட்டிப்போட்டு உழைத்திருக்கிறது கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை, ஒளிப்பதிவாளர் சுஜித் சரங், எடிட்டர் நிர்மல் கூட்டணி. ஜென் மார்ட்டினின் பின்னணி இசையும் படத்திற்குப் பலம் சேர்க்கிறது. அவரின் இசையில் ஒலிக்கும் பெப்பி, ரெட்ரோ பாடல்களும் நல்லதொரு விருந்து. பலதரப்பட்ட கதாபாத்திரங்களையும் தனித்துவமாகக் காட்டச் சிறப்பாக உழைத்திருக்கிறார் ஆடை வடிவமைப்பாளர் ஜெய் சக்தி.

Bloody Beggar Review

யாசகம் கேட்பதாக கவின் செய்யும் அட்ராசிட்டிகளில் கலகலப்பாகத் தொடங்கும் படம் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து த்ரில்லர் மோடுக்கு மாறுகிறது. இருந்தும், வழிநெடுக டார்க் ஹ்யூமரைப் பரவவிட்டுப் பொழுதுபோக்குப் படமாகவே இதைப் படைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைக்கவில்லை என்றாலும் ஓரளவு சிரிக்க வைத்துவிடுகிறார். அவ்வப்போது திரைக்கதையில் சிறு சிறு விஷயங்களை விதைத்து அதைப் பின்னர் க்ளைமாக்ஸில் கனெக்ட் செய்த விதமும் சிறப்பு. கிட்டத்தட்ட நெல்சன் பாணியிலான திரைமொழியுடனே படத்தைக் கையாண்டிருக்கிறார். அது படத்திற்குப் பிளஸ்ஸாகவும் இருக்கிறது, ஆங்காங்கே ஓவர்டோஸும் ஆகிவிடுகிறது.

புதிதாக ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் அறிமுகமாகும் அந்தப் படலத்திற்குப் பிறகு மாளிகைக்குள் கண்ணாமூச்சி ஆட்டமாகவே திரைக்கதை நகர்வது அயர்ச்சியைத் தருகிறது. அதில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம். நிறைய இடங்களில் செயற்கைத்தனமும் வழிந்தோடுவதால் எதிர்பார்த்த தாக்கத்தை எமோஷனல் காட்சிகளும் விட்டுச்செல்லவில்லை.

மொத்தத்தில் இந்த `பிளடி பெக்கர்' நம்மை ஏமாற்றவும் இல்லை, அதீத பாராட்டையும் பெறவில்லை.
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.