Amaran Review: மிடுக்கான எஸ்.கே; ஆச்சர்யப்படுத்தும் சாய் பல்லவி - படமாக வென்றதா அமரன்
Vikatan November 01, 2024 04:48 AM

இந்திய ராணுவத்தில் 44-வது ராஷ்ட்ரிய ரைஃபில் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, காஷ்மீர் மாநிலம் சோபியன் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் குடும்ப வாழ்க்கை, ராணுவத்தில் அவரின் பங்களிப்பு என அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ்ஸின் வார்த்தைகள் மூலமாகவும், அவரின் வலிகளின் மூலமாகவும் பேசியிருக்கிறது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் 'அமரன்'.

அமரன் திரைப்பட புகைப்படம்

மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன். தொடக்கத்தில் தனக்கேயுரிய துறுதுறு உடல்மொழியால் கவரும் சிவகார்த்திகேயன், ராணுவ வீரராக உருவெடுக்கையில், மிடுக்கான உடல்மொழியாலும், கச்சிதமான ஆக்ஷன்களாலும் தன் தேர்வுக்கு நியாயம் செய்திருக்கிறார். ராணுவத்தில் இணைந்து மூன்று விதமான பொறுப்புகளின் போதும் அதற்கேற்ற உடல்மொழி, வசன உச்சரிப்பு என ஆச்சர்யப்படுத்துகிறார். கணவனாக, தந்தையாக, மகனாக உருகுமிடங்களில் ஒரு நேர்ந்த நடிகராக ஜொலிக்கிறார். வெல்டன் எஸ்.கே இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவி. மொத்த படத்தையும் தன் அழுத்தமான நடிப்பால் தாங்கிப்பிடித்திருக்கிறார். நிறைய அழுகைக் காட்சிகள் வந்தாலும், அவை எல்லாவற்றையுமே படத்தின் உயிராக மாற்றியிருக்கிறது இவரின் நடிப்பு.

முக்கியமாக, ஓய்வறையில் அழும் காட்சி, இறுதிக்காட்சி எனப் பல இடங்களில் சல்யூட் வாங்குகிறார். பாசமும் கோபமும் கொண்ட அம்மாவாக கீதா கைலாசம், ராணுவ அதிகாரியாக ராகுல் போஸ், ராணுவ வீரராக புவன் அரோரா ஆகியோர் தேவையான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். சி.எச். சாய்யின் ஒளிப்பதிவு காம்பேட் ஷாட்கள், லென்த்தான ஷாட்கள் போன்றவற்றால், தேவையான பதைபதைப்பைக் கொடுத்திருக்கிறது. கதைகளத்துக்கு ஏற்ற பிரமாண்டத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனாலும், அதிகப்படியான காம்பேட் ஷாட்கள் குறைத்திருக்கலாம்.

அமரன் திரைப்பட புகைப்படம்

திரைக்கதையின் ஓட்டத்திற்குத் தேவையான நிதானத்தையும் வேகத்தையும் கச்சிதமாகக் கொடுத்து, திரைக்கதையின் மீட்டரோட பயணிக்க வைக்கிறது ஆர். கலைவண்ணின் படத்தொகுப்பு. ஜீ.வி. பிரகாஷின் இசையில் `ஹேய் மின்னலே' பாடல் முனுமுனுக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் படத்தின் உணர்வுகளுக்குக் கைகொடுத்திருக்கிறது. ஜீ.வி. பிரகாஷின் பின்னணி இசை உணர்ச்சிகரமான இடங்களிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் முதுகெலும்பாக நின்றிருக்கிறது. பல காட்சிகளை மெருகேற்றவும் செய்திருக்கிறது. ராஜீவனின் தயாரிப்பு வடிவமைப்பும், அல்டாஃப் அஸ்ஸு, யு.கே. சசிக்குமாரின் ஒப்பனையும் திரையுடனான நெருக்கத்தைக் கூட்டுகின்றன.

மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களையும், சிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் இணைந்து எழுதிய 'India's Most Fearless: True Stories of Modern Military Heroes' என்ற புத்தகத்தையும் அடிப்படையாக வைத்து, முகுந்த் வரதராஜனுடைய மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸின் பார்வையில் முகுந்த்தின் வாழ்க்கையை மீட்டெடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

அமரன்

மொத்த படமும் இந்து ரெபேக்கா வர்கீஸின் நினைவுகளின் வழியாகவே பின்னப்பட்டுள்ளதால், ராணுவ ஆக்ஷன் காட்சிகளை விட, உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்குத் தேவையான இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. காட்சியாக்கப்பட்ட விதத்தாலும், நடிகர்களிலும் நடிப்பாலும் அவை உயிர்ப்பானவையாக மாறியிருக்கின்றன. தொடக்கத்தில் காதல், பாடல்கள் போன்றவை மையக்கதை அடைவதற்கான நேரத்தை இழுத்தாலும், அசௌகரியத்தைத் தரவில்லை. அதேநேரம், எமோஷனலான காட்சி, ராணுவ ஆப்ரேஷன், மீண்டும் ஒரு எமோஷனலான காட்சி, ராணுவ ஆப்ரேஷன் என இறுதிக்காட்சி வரை, ஏற்றயிறக்கமின்றி தட்டையாகச் செல்கிறது திரைக்கதை.

ராணுவ ஆக்ஷன் காட்சிகளில் சின்ன சின்ன புதுமைகளும், சுவாரஸ்யங்களும் வந்தாலும், கடைசியில் அவை வழக்கமான ராணுவ ஆக்ஷனாகவே நிறைவுருகின்றன. மறுபுறம், ராணுவ வீரர்களுக்கு உள்ள கடினமான வாழ்க்கைச் சூழல், அவர்களுடைய குடும்பங்களின் ஏக்கம், பிரிவு போன்றவற்றை திரைக்கதையின் ஓட்டத்திலேயே பதிய வைத்திருக்கிறது ராஜ்குமார் பெரியசாமியின் திரைக்கதை. தெரிந்த முடிவுதான் என்றாலும் இறுதிக்காட்சித் தொகுப்பானது, மனதைக் கணக்க வைக்கிறது. சாய் பல்லவிவின் நடிப்பும், ஜீ.வி. பிரகாஷின் பின்னணி இசையும் இந்த தொகுப்பிற்குக் கூடுதல் ப்ளஸ்.

அமரன்

படத்தில் காட்டப்படும் காஷ்மீரும், அதன் மக்களும், அவர்களின் அரசியலும், அந்நிலத்தின் குரல்களும் ராணுவத்தின் பார்வையிலேயே சொல்லப்படுகின்றன. அப்பிராந்தியத்தில் நிலவும் வன்முறைகளைப் பற்றியும், அம்மக்களுக்கான ஜனநாயகத்தைப் பற்றியும், ஆயுதங்களுடன் குவிந்திருக்கும் ராணுவ வீரர்கள் கவலை கொள்கிறார்கள். ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டிருக்கும்போது பின்னணியில் 'ஆஸாதி' என்ற ராப் பாடல் ஒலிப்பது, காஷ்மீர் மக்களின் 'கல் எறிதல்' போராட்டத்தைத் தீவிரவாதச் செயலாக மட்டும் காட்டியது, வீட்டு ஆண்களை இழந்து, அதற்கு நீதி கேட்டு தெருவிலிறங்கிப் போராடும் பெண்களின் பதாகைகளுக்குப் பின்னாலுள்ள வலிகளையும், ராணுவத்தின் விசாரணை முறைகளையும் மேம்போக்காக பேசியது,

அமைதிக்கான பேச்சுவார்த்தையை வழியுறுத்தும் வசனங்களைப் புரிதலின்றி முன்னுக்குப் பின் முரணாக, ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமாகப் பேசியது எனக் குழப்பங்களும் படம் முழுவதும் நிரம்பியிருக்கின்றன. தட்டையான திரைக்கதை, அழுத்தமும் புதுமையும் இல்லாத ராணுவ ஆக்ஷன்களும் பின்னடைவைத் தந்தாலும், கச்சிதமான நடிப்பு, உணர்வுப்பூர்வமான காட்சிகளாலும், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் நேர்த்தியான திரையாக்கத்தாலும், மேஜர் முகுந்த் வரதராஜனுக்குக் குறைவில்லாமல் மரியாதை செய்யும் பயோபிக்காக நிறைவைத் தருகிறான் இந்த 'அமரன்'.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.