தமிழ்சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதியவர் வாலிபக்கவிஞர் வாலி. இவருக்கே ஒருமுறை பாடல் எழுத முடியவில்லையாம். 1966ல் இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான படம் மேஜர் சந்திரகாந்த்.
இந்தப் படத்தோட இந்தி ரீமேக் டியூனுக்குத் தான் அப்படி திணறிப்போனாராம். அப்போது தகுந்த நேரத்தில் ஜெயலலிதா தான் அவருக்கு உதவினாராம். எப்படின்னு பார்க்கலாமா...
கவியரசர் கண்ணதாசனுக்குப் போட்டியாகப் பாடல் எழுத வந்த கவிஞர் வாலி. இவர் எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல முன்னணி நடிகர்களுக்குப் பாடல் எழுதி அசத்தியுள்ளார். இயக்குனர்களில் கே.பாலசந்தர் முதல் ஷங்கர் வரை பாடல்கள் எழுதியுள்ளார். அதனால் தான் அவரால் 5 தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் எழுத முடிந்தது.
மேஜர் சந்திரகாந்த் படத்தில் மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், முத்துராமன், ஏவிஎம்.ராஜன், ஜெயலலிதா உள்பட பலர் நடித்து இருந்தனர். வி.குமார் இசை அமைத்துள்ளார். படத்தில் ஒரு பாடலைத் தவிர அத்தனைப் பாடலையும் வாலி எழுதி முடித்துவிட்டாராம்.
இந்தப் பாடலை சற்றே வித்தியாசமாகக் கேட்டுள்ளார் தயாரிப்பாளர் ஏவிஎம்.குமரன். ஏன்னா பாடலைக் கம்போசிங் செய்யும்போது வி.குமாரிடம் கிட்டார், டான்கோ என்ற இசைத்தட்டுவைப் போட்டுக்காட்டி இதே போல தனக்குப் பாடல் வேண்டும் என்று கேட்டாராம்.
தொடர்ந்து தமிழுக்கு தகுந்தாற்போல கொஞ்சம் மாற்றம் செய்து இசை அமைத்தாராம் குமார். அந்த டியூனைக் கேட்ட வாலி இதற்குப் போய் வார்த்தைகளை எப்படிப் போடுவதுன்னு திணறினாராம். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாராம் கவிஞர்.
வாலியோ 'எனக்கு இது சரியாக வரல. கொஞ்சம் ப்ரஷ்னஸ் தேவைப்படுது. வெளியே போயிட்டு வருவோமா'ன்னு தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு 'சூட்டிங் நடக்கு. அங்கே போலாமா'ன்னு கேட்க வாலியும் சம்மதித்துள்ளார். இருவரும் மேஜர் சந்திரகாந்த் படப்பிடிப்புத் தளத்திற்குப் போனார்களாம். அங்கு ஜெயலலிதா நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.
அப்போது திடீரென 'எனக்கு ஐடியா வந்துட்டு. வாங்க கம்போசிங் போகலாம்'னு தயாரிப்பாளர் குமரனை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றாராம் வாலி. அப்போது 'இந்த வார்த்தைகள் டியூனுக்குப் பொருந்துகிறதான்னு பாருங்க'ன்னு வாலி இசை அமைப்பாளரிடம் சொல்றாரு.
'நேற்று நீ சின்ன பாப்பா, இன்று நீ அப்பப்பா...' என்றார். இதைக் கேட்ட இசை அமைப்பாளரும் சரியாக இருக்குன்னு சொல்லிருக்காரு. அந்தப் பாடல் ஓகே. ஆகிறது. அதற்குக் காரணம் ஜெயலலிதா தானாம். அவர் நேரடியாக வந்து ஐடியா கொடுக்கவில்லை என்றாலும் மறைமுகமாகக் கொடுத்துள்ளார். அது இப்படித்தான்.
'எப்படி?'ன்னு ஏவிஎம்.குமரன் வாலியிடம் கேட்டுள்ளார். அதற்கு '16, 18 வயதில் பள்ளி சீருடையில் ஜெயலலிதா சென்றதைப் பார்த்தேன். அவரா இப்போ இப்படி நடிக்காருன்னு சூட்டிங்ல பார்க்கும்போது என்னால நம்பவே முடியலை. அதுதான் எனக்கு அப்படி வரிகள் வரக் காரணம்' என்கிறார்.�