முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
சுதர்சன் November 14, 2024 07:14 PM

விவசாயிகளுக்கு துணை நின்றதற்காக தன்னை கைது செய்தால் அதை பெருமையாக நினைத்து சிறைக்கு செல்ல தயார் என தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவின் மகன் கே.டி. ராமா ராவ் (KTR) தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி முதலமைச்சரானார்.

பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் எப்படி எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், ஆளுங்கட்சியில் இணைந்தார்களோ அதேபோல், காங்கிரஸ் ஆட்சியில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதை தவிர, பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதலமைச்சருமான கே. சந்திரசேகர் ராவின் மகன் கே.டி. ராமா ராவ் கைது செய்யப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விகாராபாத் மாவட்டத்தில் இந்த வாரம் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கே.டி. ராமா ராவை தெலங்கானா காவல்துறை கைது செய்யவிருப்பதாகவும் அவரை கைது செய்ய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முடிந்தால் தன்னை கைது செய்யட்டும் என முன்னாள் அமைச்சர் கே.டி. ராமா ராவ் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து அவர் பேசுகையில், "முதலில் இது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட வழக்கு.

'என்னை கைது செய்ய உங்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தால், அதைச் செய்யுங்கள்' என்று ரேவந்த் ரெட்டியிடம் சொல்ல விரும்புகிறேன். ஆனால், சிறையில் உள்ள 21 ஏழை விவசாயிகளை (அதிகாரிகள் குழுவைத் தாக்கியதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட விவசாயிகள்) விடுவிக்கப்பட வேண்டும்.

ரேவந்த் ரெட்டி அரசு படுதோல்வி அடைந்துள்ளது. ஒருவிதமான 'எமர்ஜென்சி' எப்படி இருக்கிறது என்பதை அனைவரும் பார்க்கலாம். விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பதை நிறுத்துங்கள் என்று ரேவந்திடம் சொல்ல விரும்புகிறேன்" என்றார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.