சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியை ஒட்டியுள்ள தண்டவாளத்தில் குறைந்தது 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலாவது சென்றுகொண்டிருப்பதால் அதன் இரைச்சல் சத்தத்தால் இங்கு பயில்கின்ற மாணவ மாணவியர் சிரமப்படுகின்றனர்.
டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி - எழும்பூர்போதாக்குறைக்கு புதிய தண்டவாளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதால் பள்ளிக்கும் தண்டவாளத்துக்கும் இடையே கட்டப்பட்டுள்ள புதிய தடுப்புச் சுவரில் பாதி இடிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாகத்துக்கு முன்பு பாதாள கழிவுநீர் கால்வாய் உள்ளது. அதற்கு மேல உள்ள சிமென்ட் கட்டுமானத்தில் ரயில்வே பணிகளுக்காக வாகனங்கள் சென்று அதன் ஒரு பகுதி சேதமாகி கம்பிகள் வெளியே தெரிகின்றன.
எழும்பூர்அதை முழுமையாக அடைக்காமல் அதற்கு மேலே சாக்கு மூட்டை, மரப்பலகை போன்றவற்றை வைத்து பெயரளவுக்கு அடைத்துள்ளனர். இதற்கு அருகில்தான் பள்ளியிலிருந்து மேம்பாலத்தின் வழியாகப் பேருந்து நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் செல்வதற்கான படிக்கட்டு இருக்கிறது. அந்தப் படிக்கட்டுமே சுகாதாரமற்ற நிலையில் குப்பைகள், மழைநீர் தேங்கி பாசி படிந்து மோசமான நிலையில் உள்ளது.
பள்ளிக்கு வருகிற மற்றொரு முக்கியப் பாதையில், கூவம் நதிக்கரையில் நடைபெறும் பணிகள் மற்றும் ரயில்வே பணிகளுக்காக வாகனங்கள் சென்று அந்த பாதையே மணலால் மூடப்பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களில் அந்த இடமே சகதியாக மாறிவிடுகின்றன. மேலும், இந்தப் பள்ளியின் வகுப்பறையை ஒட்டி ஜன்னல் அருகே கட்டப்பட்டுள்ள திறந்தவெளி கால்வாயில் கழிவுநீர் தேங்கியுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி - எழும்பூர்கூவம் நதிக்கரையோரம் நடந்துவரும் பணிகளால் பள்ளிக்குப் பின்புறம் உள்ள தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளியானது பாதுகாப்பு இல்லாமல், எந்நேரமும் அந்நியர்கள் உள்ளே நுழைவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (13.11.2024) இந்தப் பள்ளியை ஆய்வு செய்ய வந்த பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் இது குறித்த கேட்டபோது, ``நாங்கள் படிக்கிற காலத்தில் மரத்தடியில உட்கார்ந்துதான் படிச்சோம். எனக்கு மாணவர்கள் நன்றாகப் படிக்கணும் அவ்வளவு தான். இங்கு நடைபெறுகிற பணிகள் மற்ற துறை சம்பந்தப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்." என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.