IPL Auction: 'இதுவரை ஏலத்துக்கே வராத ஒரே வீரர்' - கோலியை மல்லையா தூக்கியது எப்படி? Auction Rewind 2
Vikatan November 16, 2024 12:48 AM
ஐ.பி.எல் இன் 18 வது சீசனுக்கு முன்பான மெகா ஏல சமயத்தில் நிற்கிறோம். கடந்த 17 ஆண்டுகளில் ஐ.பி.எல் இல் மாறவே மாறாத ஒரே ஒரு விஷயம் என்ன தெரியுமா? விராட் கோலிதான். கடந்த 17 ஆண்டுகளில் அவர் பெங்களூரு அணிக்காக மட்டும்தான் ஆடியிருக்கிறார். ஐ.பி.எல் இல் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஆடிவிட்டார்கள். வேறு எந்த வீரரும் செய்யாத சாதனை இது. இத்தனை ஆண்டுகளாக விசுவாசமாக கோலி ஆடி வருகிறாரே? அவர் முதல் முதலில் பெங்களூரு அணிக்கு எப்படி அழைத்து வரப்பட்டார் என தெரியுமா? வாருங்கள் வழக்கம்போல அப்படியே கால ஓட்டத்தில் பின்னோக்கி பயணிப்போம்.
Virat Kohli ஆர்.சி.பியும் விஜய் மல்லையா முடிவுகளும்..!

விஜய் மல்லையா ஏமாற்றுக்காரராக அலப்பறை பார்ட்டியாக அறியப்பட்டாலும் கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்காக சில முக்கியமான முடிவுகளை எடுத்ததில் அவரின் பங்களிப்பு அதிகமாகவே இருந்திருக்கிறது. 2008 இல் பெரும் முதலாளிகள் ஐ.பி.எல் அணிகளை வாங்கிய போது அதிக முதலீட்டை கொட்டியவர்களின் பட்டியலில் டாப்பில் விஜய் மல்லையாவும் இருந்தார். மும்பை அணியை அம்பானியின் குடும்பம் 111.9 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியிருந்தது. அவர்களுக்கு அடுத்தப்படியாக மல்லையாதான் ஐ.பி.எல் க்கு அதிகப்படியாக கொட்டிக் கொடுத்தார். 111.6 மில்லியன் டாலர்களுக்கு பெங்களூரு அணியை மல்லையா வாங்கியிருந்தார். மல்லையா சில வீரர்களை அணிக்குள் கொண்டு வந்த விதமே அத்தனை வேடிக்கையாக இருக்கும்.

2008 இல் முதல் ஐ.பி.எல் சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடந்தபோது அனில் கும்ப்ளேவின் பெயரும் ஏலம்போகும் வீரர்களுக்கான லிஸ்ட்டில் இருந்தது. 'Iconic Players' என ஐ.பி.எல் நிர்வாகம் ஒரு லிஸ்ட்டை வெளியிட்டிருந்தது. அதிலிருந்த வீரர்களை அணிகள் ஏலத்துக்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஆனால், அனில் கும்ப்ளேவின் பெயர் அந்த லிஸ்ட்டில் இல்லை. இதிலேயே அனில் கும்ப்ளே கொஞ்சம் அப்செட்தான். ராகுல் டிராவிட்டின் பெயர் அதில் இருந்தது. டிராவிட்டை பெங்களூரு அணி 'Iconic' வீரராக வாங்கிக் கொண்டது. டிராவிட் கன்னடர், கும்ப்ளேவும் கன்னடர். அதனால் கும்ப்ளேவையும் அணிக்குள் கொண்டு வர வேண்டும் என மல்லையா முடிவு செய்தார்.

ஏல அரங்கில் கும்ப்ளேவின் பெயர் ஒலிக்கப்பட்டதுமே மல்லையா உடனடியாக எழுந்துவிட்டார். 'அவர் என்னுடைய பெங்களூருவை சேர்ந்தவர். அவர் எனக்கு வேண்டும்.' என எல்லாருக்கும் மத்தியில் உரக்கக் கூறுகிறார். விஜய் மல்லையா முன்வந்து இவ்வளவு தீவிரமாக கேட்டதால் வேறு எந்த அணியுமே கும்ப்ளேவுக்கு கையை தூக்கவில்லை. அடிப்படை விலைக்கே பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்.

2Anil Kumble

மல்லையா கிறிஸ் கெயிலை பெங்களூரு அணிக்குள் கொண்டு வந்ததுமே சுவாரஸ்யமான சம்பவம்தான். 2008-10 வரைக்குமான 3 சீசன்களுக்கு கெயில் கொல்கத்தா அணியில் ஆடியிருந்தார். 2011 சீசனுக்கு முன்பான மெகா ஏலத்திலும் தன்னுடைய பெயரை பதிவு செய்து வைத்திருந்தார். ஆனால், எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் கெய்லுக்கு இடமில்லை. இதனால் ஜாலியாக வெக்கேசனுக்கு சென்றுவிட்டார் கெய்ல். ஒரு நைட் க்ளப்பில் கெய்ல் ரொம்பவே ஜாலியாக குதூகலமாக இருந்த சமயத்தில் அவருக்கு இந்தியாவிலிருந்து ஒரு ஃபோன் கால். மறுமுனையில் பேசியவர் விஜய் மல்லையா, 'அடுத்த சனிக்கிழமைக்குள் நீங்கள் இந்தியாவில் இருக்க வேண்டும். எம்பஸிக்கு சென்று விசா வேலைகளைப் பாருங்கள். நீங்கள் பெங்களூருவுக்காக ஆடப்போகிறீர்கள்.' எனக் கூறி வைத்துவிட்டார்.

பெங்களூரு அணிக்காக திரிக் நேனஸ் என்பவரை வாங்கி வைத்திருந்தார்கள். அவர் காயமடைந்து விடவே அவருக்குப் பதிலாகத்தான் கெய்லை அழைத்தார் மல்லையா. அந்த அழைப்புக்குப் பிறகு கெய்ல் ஐ.பி.எல் ஒரு ரவுண்ட் வந்தார். அந்த சீசனிலேயே 600+ ரன்களை அடித்து பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு செல்ல காரணமாக இருந்தார்.

மல்லையாவின் சில தேர்வுகள் ஆகச்சிறந்ததாக மாறியிருக்கிறது. அந்த விஷயத்தில் கெய்லுக்கு முந்தைய உதாரணம் கோலிதான்.

விஜய் மல்லையா
2008 சமயத்தில் கோலி 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில்தான் ஆடி வந்தார். U19 இந்திய அணியின் கேப்டனே அவர்தான். 2008 ஆம் ஆண்டில் இந்திய அணி U19 உலகக்கோப்பையையும் வென்றிருந்தது. அந்தத் தொடரில் இந்தியா சார்பில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் கோலி இருந்தார்.
Virat Kohli

2008 ஐ.பி.எல் ஏலம் சமயத்தில் U19 கிரிக்கெட்டர்கள் நேரடியாக ஏலத்தில் பங்கேற்க அனுமதியில்லை. 'Draft' முறையில் அணிகள் அந்த வீரர்களை நேரடியாக பேசி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். கோலி டெல்லியை சேர்ந்தவர். அதனால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை வாங்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் ஓடியது.

ஆனால், டெல்லி பின்வாங்கியது. அணியில் நிறைய பேட்டர்கள் இருக்கிறார்கள். மேலும் ஒரு பேட்டர் எதற்கு? என முடிவெடுத்தனர். கோலிக்கு பதிலாக பிரதீப் சங்வான் என்கிற இடதுகை வேகப்பந்து வீச்சாளரை டெல்லிக்கு எடுத்தார்கள். பிரதீப்பும் டெல்லியை சேர்ந்தவர்தான். கோலியுடன் U19 இந்திய அணியில் ஆடியவர்தான். சொந்த அணி தன்னை எடுக்காமல் போன சோகத்தில் இருந்த கோலியை மல்லையா டிக் அடித்தார்.

'கோலி பெரிய ஆளாக வருவார் என உள்ளுணர்வு சொன்னது. அதனால்தான் கோலியை அணியில் எடுத்தோம்.' என மல்லையா பின்பு விளக்கம் கொடுத்தார். அந்த முதல் சீசனில் கோலிக்கு கொடுக்கப்பட்ட தொகை வெறும் 12 லட்சம். ஒரே அணிக்காக நீண்ட காலம் ஆடிய வீரர் எனும் பெருமை கோலிக்கு இருப்பதை போலவே இன்னொரு பெருமையும் இருக்கிறது.

Virat Kohli
அதாவது, இத்தனை ஆண்டுகளில் ஏலத்துக்கே வராத ஒரே வீரரும் விராட் கோலிதான். 2008 இல் நேரடியாக ஒப்பந்தம் செய்த விராட் கோலியை பெங்களூரு அணி ஒவ்வொரு முறையும் அப்படியே தக்கவைத்துக் கொண்டது. 12 லட்சத்துக்கு பெங்களூரு அணிக்குள் வந்த கோலி இப்போது வாங்கும் தொகை 21 கோடி ரூபாய்.

டெல்லி அணிக்கு விராட் கோலி Costly miss தான். ஒரு தலைமுறைக்கான வீரரை டெல்லி இழந்துவிட்டது. கோலிக்கு பதில் டெல்லி அணியால் எடுக்கப்பட்ட பிரதீப் சங்வான் பின்னாளில் ஊக்கமருந்து சர்ச்சையிலெல்லாம் சிக்கி தடையை அனுபவித்தார். மீண்டும் கம்பேக் கொடுத்தாலும் அவரால் தனக்கென ஒரு அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சாதிக்க முடியவில்லை.

Virat Kohli | விராட் கோலி

சொந்த அணியே கைவிட்ட போதும் பெங்களூரு அணி கோலியை நம்பி அவருக்கென அறிமுகத்தையும் வாய்ப்பையும் கொடுத்தது. அதற்கான நன்றிக்கடனாகத்தான் கோலி வேறெந்த அணிக்கு தாவாமல் விசுவாசத்தோடு இருக்கிறார்.!

முதல் பாகத்தை படிக்க...

நாளை: 'MIயின் தலையெழுத்தை மாற்றிய அந்த 8 நிமிடங்கள்;ரோஹித் மும்பையின் ராஜாவான கதை!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.