UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
குலசேகரன் முனிரத்தினம் November 16, 2024 09:14 AM

UP Fire Accident: உத்தரபிரதேச மருத்துவமனையில் நடந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

10 குழந்தைகள் உயிரிழப்பு:

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லகட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் பிரிவில், வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தன. தீ விபத்தானது மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) இரவு 10:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் 15-20 குழந்தைகள் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தன. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கைக்குழந்தைகளை இழந்த பெற்றோர், மருத்துவமனை வளாகத்தில் கதறி அழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி, காண்போரை கதிகலங்க செய்துள்ளது. பிஞ்சு குழந்தைகளின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால், அவற்றை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தீவிர சிகிச்சை:

சம்பவத்தின் போது மருத்துவமனையின் குறிப்பிட்ட வார்டில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக உருவான பெரும் புகையால் சில குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் வெளியே ஓட முயன்றதால், வார்டில் நெரிசல் போன்ற குழப்பமான சூழல் ஏற்பட்டது. 

விபத்துக்கான காரணம் என்ன?

முதற்கட்ட தகவல்களின்படி, ம்ருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். ஜான்சி மாவட்டத்தின் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.