துபாய் ட்ரிப்: அந்த 6000 கோடி என்ன ஆச்சு? CM ஸ்டாலினுக்கு லண்டனில் இருந்து அண்ணாமலை கேள்வி!
Seithipunal Tamil November 16, 2024 09:48 AM

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று அறிவிப்புகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதையே முழு நேரப் பணியாகச் செய்து வருகிறது திமுக அரசு. அதன் வரிசையில் இன்று, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், ரூ. 1,000 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருப்பதாக, முதலமைச்சர் பெருமைப்பட்டிருக்கிறார். 

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில், தைவான் நாட்டைச் சேர்ந்த காலணி நிறுவனம், ரூ. 2,302 கோடி முதலீடு செய்வதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அறிவித்த திமுக அரசு, அதன் மூலம், 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவித்தது. சுமார் 20 மாதங்கள் கடந்தும், அந்தத் தொழிற்சாலை கட்டுமானத்துக்காக, ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது.

முதலமைச்சர் குடும்பத்துடன் துபாய் சுற்றுலா சென்று, ரூ. 6,000 கோடி முதலீடு ஈர்த்துள்ளோம் என்று கூறி ஆண்டுகள் இரண்டு ஆகின்றன. வெறும் ரூ.60 கோடி முதலீடு கூட இன்னும் தமிழகத்தை அடையவில்லை. இது போன்ற வீண் நாடகங்களை இனியாவது நிறுத்தி விட்டு, தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்" என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.