ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவத்தால் புதுச்சேரி, விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
அதே போல், ரெயில் பயணத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைக்காக ரெயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் ரெயில் தாமதமாக இயக்கப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, தென்காசியில் இருந்து அஜித் குமார் என்ற வாலிபர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பொதிகை ரெயிலில் பயணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் அஜித் குமார் பயணித்த பொதிகை ரெயிலும் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக புறப்பட்டது. இதனால், அவர் ரெயிலிலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ரெயிலில் பயணம் செய்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.