மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை மண்ணுளிப் பாம்புகள் வசிக்கின்றன. ’இரட்டை தலைப் பாம்பு’ என அழைக்கப்படும் சிவப்பு நிற மண்ணுளிப் பாம்புகளுக்கு சர்வதேச சந்தைகளில் அதிக மவுசு இருக்கிறதாக கூறப்படுகிறது. சீனா, மலேசியா ஆகிய நாடுகளில் இவ்வகைப் பாம்புகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. அந்த நாடுகளில் சில மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த வகைப் பாம்புகள் வீடுகளில் இருந்தால் செல்வம் பெருகும் என்ற மூட நம்பிக்கையும் உள்ளது. இந்தியாவில் 3 முதல் 4 கிலோ வரை எடை கொண்ட பாம்பு ரூ.25 லட்சம் வரை விலை போகும் எனக் கூறப்படுகிறது. இந்த மண்ணுளிப் பாம்புகளை சில கும்பல் தமிழகம் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மண்ணுளிப் பாம்பு கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
அம்பாசமுத்திரம்இந்த நிலையில், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகிலுள்ள அடையகருங்குளம் பகுதியில் மண்ணுளி பாம்பு விற்கப்படுவதாக அம்பாசமுத்திரம் வனக்கோட்ட இணை இயக்குனர் இளையராஜாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அடையகருங்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது வனத்துறையினரை கண்ட 4 பேர் ஓட்டம் பிடித்தனர். ஆனந்தன், அமிர்தசாமி, குமார், ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை பிடித்ததில் அவர்கள் மண்ணுளி பாம்புகளை விற்க முயன்ற இடைத்தரகர்கள் என்பது தெரிய வந்தது.
ரூ.2 கோடி வரை பேரம் பேசி வாட்ஸ்அப் மூலம் மண்ணுளி பாம்பினை விற்க முயன்றது தெரிய வந்தது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மண்ணுளிப் பாம்பை விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே வனத்துறையினர் நடத்திய வாகனச் சோதனையில் ஒரு காரில் சுமார் 5 கிலோ எடை கொண்ட மண்ணுளிப் பாம்பினை கடத்தல் கும்பலிடமிருந்து மீட்டனர். இது குறித்து வனத்துறை அலுவலர்களிடம் பேசினோம், “அடையகருங்குளத்தில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்தியதில் மண்ணுளி பாம்பை பேரம் பேசி கைமாற்றி விடுவது மட்டுமே தங்களது பணி எனக் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்கள்கேரளாவில் மண்ணுளிப் பாம்பினை வைத்திருப்பவரை தமிழகத்திற்கு வரவழைக்க இடைத்தரகர்களை போனில் பேச வைத்து பாம்பை வாங்க ஆட்கள் தயாராக இருப்பது போலக் கூறினோம். இதை நம்பி திருவனந்தபுரத்தில் இருந்து அந்த நபர் புறப்படுவதை உறுதி செய்து கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியில் மடக்கிப் பிடித்தோம். அவரிடமிருந்து மண்ணுளிப் பாம்பு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரினை பறிமுதல் செய்தோம்.” என்றனர்.