தீப மலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஒரே வீட்டில் 7 நபர்கள் உடல்கள் சிக்கி மண்ணுக்கு அடியில் சிக்கிய நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு தீயணைப்புத் துறையினர் இணைந்து நேற்று கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக போராடி 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு 10:30 மணியளவில் லேசான சாரல் மழை காரணமாக மீட்பு படையினர் தங்களது மீட்பு பணியை நிறுத்தி இன்று காலை இரண்டாவது நாளாக 8 மணி அளவில் பணியை தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்ட ஐஐடி பேராசிரியர்கள் விசாரணை குழு பேராசிரியர் நரசிம்மராவ் தலைமையில் 4 பேர் குழுவினர் மண் சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட வீட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து மலை மீது மண் சரிவு ஏற்பட்ட இடம், நீர்வரக் கூடிய பாதை உள்ளிட்டவை ஆய்வு செய்து அருகாமையில் உள்ள வீடுகளில் இந்த மண் சரிவு காரணமாக ஏற்பட்ட கட்டிட விரிசல் உள்ளிட்ட அனைத்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதுமட்டுமின்றி பல்வேறு வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டு புதையுண்ட இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த இக்குழுவின் பேராசிரியர் மோகன், இந்த இடம் பொதுமக்கள் வசிக்க பாதுகாப்பான இடம் இல்லை என்றும் இனி இந்த பகுதிகளில் நிலச் சரிவு ஏற்படாமல் இருக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து இரண்டு நாட்களில் அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பிப்போம் என தெரிவித்தார். மலை மீது பெய்த கனமழை காரணமாக மலை மீது உள்ள மண் பகுதியில் அனைத்தும் செம்மண்ணாக இருப்பதால் ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளத்தால் நீர் அரிப்பு ஏற்பட்டு இதுபோன்று மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக விரிவாக தெரிவித்தார். இதன் காரணமாகவே மலையில் இருந்த பெரிய பெரிய ராட்சச பாறைகள் உருண்டு விழுந்தது தெரிவித்தார்.
இதுபோன்ற ஆபத்தான இடங்களில் வீடு கட்டக்கூடிய வீட்டின் உரிமையாளர்கள் முறையான பொறியாளர்களை வைத்து இந்த இடத்தில் வீடு கட்டலாமா என ஆய்வு செய்த பின்னர்தான் கட்ட வேண்டும் என தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில் மீட்பு பணிக்கு இடையூறாக உள்ள ராட்சச பாறையை துளையிட்டு கெமிக்கல் பயன்படுத்தி அந்த பாறையை வெடிக்க செய்து பின்னர் தான் அதற்கு அடியில் சிக்கி உள்ள இரண்டு சடலங்களை மீட்கலாம் என தெரிவித்தார். இது போன்று பாறையை வெடிக்க வைப்பதால் அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளுக்கு பொது மக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படாது என தெரிவித்தார்.