ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் மரணம்
Top Tamil News December 03, 2024 09:48 PM

மீஞ்சூர் அருகே ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் மின் நகரை சேர்ந்த வினோத்குமார் 35 திருமணமாகாதவர். வல்லூர் அனல் மின் நிலையத்தில் கடந்த 5ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அண்மையில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்திலும் வினோத்குமார் இணைந்துள்ளார். இவர் தினமும் காலையில் அத்திப்பட்டு பகுதியில் உள்ள ஜிம்மிற்கு சென்று குறைந்தது 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது வாடிக்கை. இன்று காலை வழக்கம் போல வினோத்குமார் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 


இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் போலீசார் வினோத்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்பயிற்சி போட்டிகள் ஆணழகன் போட்டி போன்றவற்றில் பெரிதாக ஈடுபாடு இல்லாத வினோத்குமார் தனது உடல் கட்டமைப்பை மட்டுமே பேணி காப்பதற்காக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக உடற்பயிற்சி செய்து வருவதாகவும், இன்று உடற்பயிற்சி செய்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே அமர்ந்து விட்டார் எனவும், மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் உயிரிழந்து விட்டார் என சகோதரர் தெரிவித்தார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.