பத்திரம் மக்களே... இன்று வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... கொட்டித் தீர்க்கப் போகுது கனமழை!
Dinamaalai December 22, 2024 01:48 PM

 

தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது.இது தொடர்ந்து ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நகர்ந்து சென்று பின்னர், நாளை மீண்டும் வந்த பாதையிலேயே திரும்பி சென்னைக்கு கிழக்கே வந்தடையும்.

நாளை டிசம்பர் 23ம் தேதி திங்கட்கிழமை டெல்டா-வட இலங்கையையொட்டி நகர்ந்து சென்று, அதற்கு அடுத்த நாள் டிசம்பர் 24ம் தேதி பாக்நீர் இணைப்பு அல்லது டெல்டா பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து அரபிக்கடலை சென்றடைய உள்ளதாக கூறப்படுகிறது.  காற்றழுத்த தாழ்வுப் பகுதி மீண்டும் சென்னைக்கு திரும்ப இருப்பதால் டிசம்பர் 23ம் தேதி  சென்னை உட்பட பல  பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை பெறலாம் என தெரிகிறது.  

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 25ம் தேதி வரை மிதமான மழைக்கு  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று டிசம்பர் 20 ம் தேதி முதல் டிசம்பர் 25ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் இன்று டிசம்பர் 21ம் தேதி சென்னைக்கு 370 கி.மீ. தூரத்தில் நிலைக்கொண்டிருக்கும். அதே நேரத்தில், ஆந்திர கடல் பகுதிக்கு மேல் உயர் அழுத்தம் இருப்பதால், புயல் சின்னம் மேலும் வடக்கு நோக்கி நகர வாய்ப்பில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.