தூத்துக்குடி மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய வழக்கில் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன் தருவை மேல தெருவை சேர்ந்தவர் சுயம்பு மகன் தாமோதரன் (46). இவரது மனைவி ஜெயபாப்பா (43). இவர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணத்திற்காக ஜெய பாப்பா 40,000 ரொக்க பணமும் 25 பவுன் நகையும் கொடுத்துள்ளார். திருமணம் முடிந்ததும் 25 பவுன் நகை திருமணச் செலவுக்காக கணவர் தாமோதரன் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் மனைவி ஜெய பாப்பாவிடம் கணவரும், கணவரின் குடும்பத்தாரும் கூடுதலாக 10 பவுன் நகை கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஜெயபாப்பா திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் தாமோதரன் மற்றும் கணவரின் தந்தை சுயம்பு, தாயார் வசந்த புஷ்பம்,தங்கை லிங்க செல்வி, தம்பி சுந்தரலிங்கம், தங்கைகள் லிங்கேஸ்வரி ஜெயக்கொடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வரதராஜன், குற்றச்சாட்டப்பட்ட கணவர் தாமோதரனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் இரண்டு மாதத்திற்குள் ரொக்கமாக பெற்ற 40 ஆயிரத்தையும் 25 பவுனையும் அவரது மனைவி ஜெய பாப்பாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
மேலும் தாமோதரன் தாயார் வசந்த புஷ்பம், தங்கை லிங்க செல்வி, தம்பி சுந்தரலிங்கம், தங்கைகள் லிங்கேஸ்வரி, ஜெயகொடி ஆகியோர்களுக்கு ஒரு நாள் நீதிமன்ற சிறை தண்டனையும் தலா 2000 ரூபாயும் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். தாமோதரன் தந்தை சுயம்பு வழக்கு முடியும் முன்னே காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.