திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக விசாரணைக்கு ஆஜராக வந்த மாயாண்டி என்பவர் போலீசார் கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதிலும் மர்ம நபர்கள் காரில் வந்து அந்த விசாரணை கைதியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த விவகாரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது.
அப்போது பணியின் போது காவல்துறையினர் செல்போனில் மூழ்கிக்கிடப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதும் கொலையை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது ஏன் என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். அதோடு கொலை நடந்த போது பணியில் இருந்து அனைத்து காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.