லண்டனில் இருந்து திரும்பியதும் பாஜக அண்ணாமலை ஆளே மாறிட்டாரு. இதெல்லாமே பொறுப்பான எதிர்கட்சியாக எடப்பாடி செய்ய வேண்டிய வேலை. சென்னை பெருவெள்ளத்திலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்திலும் எடப்பாடி மிஸ் செய்ததைப் போலவே ஆளுங்கட்சியின் தவறுகளைத் தட்டிக் கேட்க இந்த முறையும் தவறிவிட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தேர்ந்தல் நெருங்கும் நேரத்திலும் வெறும் அறிக்கை அரசியல் செய்துக் கொண்டிருந்தால் எப்படி? என்று கேள்வி எழுப்புகிறார்கள் அதிமுக தொண்டர்கள். அரசியலுக்கும் அப்பாற்பட்டு, நடந்து முடிந்த இந்த கொடூர சம்பவம் ஒவ்வொருவர் நெஞ்சையும் பதைபதைக்க செய்கிறது. தங்கள் மகள்களை அத்தனைக் கனவுகளுடன் படிக்க அனுப்புகிறார்கள். கவர்னர் மாளிக்கைக்கு அருகிலேயே இருக்கும் தலைநகர் சென்னையின் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தில் இத்தனை கொடூர செயல் அரங்கேறியிருக்கிறது.
இது குறித்து நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில் 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும் என்றார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன் என்றவர், இன்று டிசம்பர் 27ம் தேதி காலை 10 மணிக்கு என்னை நானே சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.
இன்று டிசம்பர் முதல் வழக்கமான ஆர்ப்பாட்டம் நடைபெறாது. இனி வேறு மாதிரி டீல் செய்ய போகிறேன். ஒரே இடத்தில் கூடாமல் பாஜகவினர் ஒவ்வொருவரும் தங்களது வீட்டின் முன் நின்று போராட்டம் நடத்துவோம். 10 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை நடத்த முடியுமா?
திமுக உண்மையான அரசாக இருந்தால் 15 நாட்களில் தண்டனை வழங்க வேண்டும். திமுகவில் இருக்கக் கூடியவர்களுக்கு கட்சிப் போர்வை தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அனைத்து தகவலையும் எப்படி வெளியிட்டீர்கள்? அண்ணாமலை வீதிக்கு இறங்கினால் தாங்காது. 48 நாட்கள் விரதம் இருந்து, ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன்" என ஆவேசமாக கூறியிருந்தார்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் போலீசார் மெத்தனமாக இருப்பதாகவே பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதுவும் பாலியல் வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் தகவல்கள் இணையத்தில் கசிந்தது பிற மாணவிகள் இது குறித்து புகாரளிக்காமல் இருக்க செய்கிற மறைமுக மிரட்டலாகவும், ஆடி காரில் வந்தது யார்? அது குறித்து ஏன் போலீசார் பேச மறுக்கின்றனர்? என்றும் சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.