தமிழகமே பரபரப்பு.... மாணவி சத்யபிரியா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு!
Dinamaalai December 27, 2024 10:48 AM

தமிழகத்தையே அதிர வைத்த கல்லூரி மாணவி சத்யபிரியா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருதலைக் காதல் காரணமாக ஒரு குடும்பமே நிர்கதியானதாக பரபரப்பாக பேசப்பட்ட வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

சென்னை பரங்கிமலை காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வந்த கல்லூரி மாணவியான சத்யபிரியா, கடந்த 2022ம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்த போது, வீட்டினருகே வசித்து வந்த சதீஷ் என்ற இளைஞரால் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த ரயிலில் தள்ளப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் மாணவி சத்யபிரியா தன்னிடம் பேசாமல் விட்டதால் சதீஷ் ரயில் முன் தள்ளி கொன்றது தெரியவந்தது.

வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கில் 70 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். அதே சமயம் பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று டிசம்பர் 27ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.

சத்யப்ரியாவும்,  சதீஷும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், சத்யாவின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சதீஷிடம் பேசுவதை சத்யப்பிரியா நிறுத்தி விட்டதாக அப்போது கூறப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், சத்யப்பிரியாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தகவல்கள் வெளியானதாக அப்போது போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு இந்த வழக்கு சிபிஐ சிஐடிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.