மழைக்காலம் தொடங்கி விட்டாலே சேற்றுப்புண், குளிர்காலத்தில் அது பித்த வெடிப்பு என நம் குதிகால் வெடிக்கத் தொடங்கி விடுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் பாதங்களில் என்ன தான் க்ரீம்கள் தேய்த்தாலும் நடக்கும் போது கடுமையான வலியை அனுபவிக்க நேரிடும்.
அதே போல் குதிகால் வெடிப்பு குணமடைய குளிர்காலம் முழுவதும் ஆகலாம். கிராக் ஹீல்ஸ் பிரச்சனையை வீட்டிலேயே சில வழிமுறைகள் மூலம் எளிதாக சரி செய்துவிடலாம். அதிலும் குதிகால் வெடிப்பை ஒரே இரவில் மிகவும் மென்மையாக்கலாம்.
குளிர்காலம் தொடங்கியவுடன் குதிகால் வெடிப்புகளால் உங்களுக்கும் தொந்தரவு இருந்தால் இந்த முறையை தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். இந்த வகையான க்ரீம் செய்ய தேங்காய் எண்ணெய், கிளிசரின் , வைட்டமின் ஈ காப்ஸ்யூல் 3 பொருட்கள் மட்டுமே போதுமானது.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கிளிசரின் - 1 டீஸ்பூன்
வைட்டமின் ஈ காப்ஸ்யூல் - 1
வீட்டில் பலருக்கு அல்லது தொடர் தொந்தரவுகள் இருந்தால் பெரிய அளவில் கலந்து, தயாரிக்கப்பட்ட கிரீமை சேமித்து வைத்து, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய், கிளிசரின் மற்றும் ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவு தான் குதிகால் வெடிப்புகளை குணப்படுத்தி பாதங்களை அழகாக்கும் கிரீம் தயார்.
இந்த க்ரீமை இரவில் பயன்படுத்தினால் கூடுதல் பலன்களை பெறலாம். முதலில் கால்களை ஒரு வாளி கல் உப்பு சேர்த்த வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். கால்களை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து ஈரம் போக துடைக்கவும். தூங்குவதற்கு முன், தயாரிக்கப்பட்ட கிரீம் உங்கள் கால்களில் தடவி கொண்டு காட்டன் சாக்ஸ் அணிந்து தூங்கச் செல்லலாம்.
காலையில் தூங்கி எழுந்ததும் குதிகால் முற்றிலும் மென்மையாக மாறியிருப்பதை கண்கூடாகக் காணலாம். தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் செய்தாலே நம்ப முடியாத வகையில் குதிகால் மிகவும் மென்மையாக மாறும்.
கிளிசரின் நமது சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதனை குதிகால் வெடிப்புகளில் பயன்படுத்தும் போது, அவற்றை விரைவாக குணப்படுத்த இது நன்மை பயக்கும். கிளிசரினை மற்ற ஏதாவது மூலப்பொருளுடன் கலந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும் .இதனை தோலில் நேரடியாகப் பயன்படுத்தினால், அது எரிச்சலை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.