50 வருசமா மெல்போர்னில் நடக்காத விஷயம்.. ரோஹித் அண்ட் கோவிற்கு சரித்திரம் படைக்க பொன்னான வாய்ப்பு..
Tamil Minutes December 29, 2024 10:48 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தற்போது மெல்போர்ன் மைதானத்தில் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது ஒரு பக்கம் இருக்க, இதில் இந்திய அணி வெற்றி பெறவும், தோல்வியடையவும் அல்லது டிராவில் முடிக்கவும் என அனைத்திற்குமே வாய்ப்பு உள்ளது விறுவிறுப்பான ஒன்றாக உள்ளது.

நான்கு நாட்கள் முடிவடைந்த டெஸ்ட் போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 333 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்களும், இந்திய அணி 369 ரன்களும் எடுத்திருந்தது. தொடர்ந்து 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருந்த ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சரிவை கண்டிருந்தது என்றே சொல்லலாம்.

விதியை மாற்றிய ஆஸ்திரேலியா

பந்து வீச்சில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் கலக்க ஆஸ்திரேலிய அணியின் சிறந்த வீரர்களான கவாஜா, ஸ்மித், ஹெட் என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டிய வண்ணம் இருந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையிலும் இருந்தது.

இதனால் இந்திய அணி அவர்களை விரைவாக ஆல் அவுட் செய்து குறைந்த ஸ்கோரை எட்டிப்பிடித்து விடும் என்றே அனைவரும் கருதினர். ஆனால் ஏழாவது விக்கெட்டிற்கு இணைந்த கம்மின்ஸ் மற்றும் மார்னஸ் ஆகிய இருவரும் போட்டியின் விதியை அப்படியே மாற்றி எழுதியிருந்தனர். ஏழாவது விக்கெட்டுக்கு அவர்கள் 50 ரன்களுக்கு மேல் சேர்க்க, ஆஸ்திரேலிய அணி நல்ல ஒரு முன்னிலை வைக்கவும் காரணமாக அமைந்தினர்.

தொடர்ந்து அடுத்த மூன்று விக்கெட்டுகளை இந்திய அணி வேகமாக எடுத்தாலும் கடைசி விக்கெட்டுக்கு லயன் மற்றும் போலண்ட் ஆகிய இருவரும் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விட்டனர். காலையில் சிறப்பாக தொடங்கிய இந்திய அணி தற்போது சரிவைக் கண்டுள்ளதால் ஆஸ்திரேலிய அணியும் பலமாக திகழ்ந்து விட்டது.

சரித்திரம் எழுத வாய்ப்பு

இன்னும் ஒரு நாள் மீதம் இருக்க ஆஸ்திரேலிய அடுத்த சில ஓவர்கள் ஆடிவிட்டு டிக்ளேர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக எந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டிகள் நடந்தாலும் 300 ரன்கள் என்ற இலக்கை தொடுவது சற்று சிரமமான விஷயம் தான். இதற்கு மத்தியில் கடந்த 50 ஆண்டுகளில் மெல்போர்ன் மைதானத்தில் எந்த அணிகளும் 240 க்கும் மேற்பட்ட இலக்கை எட்டிப் பிடித்ததே கிடையாது.

இதனால் இந்தியாவுக்கும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் அப்படி ஒரு வேளை அதிரடி காட்டி அவர்கள் இந்த இலக்கை தொட்டுவிட்டால் மெல்போர்ன் மைதானத்தில் புதிய சரித்திரத்தை எழுதுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.