TVK:`அறவழியில் மக்களைச் சந்தித்த, எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வதுதான் ஜனநாயகமா?' - விஜய் கண்டனம்
Vikatan December 31, 2024 01:48 AM
தவெக கட்சி பொது செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்

அண்ணா பல்லைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதத்தை நகல் எடுத்து தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு கொடுத்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள், விஜய் எழுதிய அந்த கடிதத்தை கொடுத்து வருகின்றனா். அந்தவகையில் சென்னை தி நகர், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் தவெக தொண்டர்கள், பொதுமக்களுக்கு விஜய் எழுதிய கடிதத்தை கொடுத்து வந்தனர்.

அப்போது இந்த செயலை அனுமதியின்றி செய்ததாகக் கூறி தவெகவினரை போலீஸார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா். அப்போது அவர்களைக் காண தவெக கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் சென்றார். அந்த சமயத்தில் ஆனந்தையும் போலீஸார் கைது செய்திருக்கின்றனர். அவரது கைதுக்கு த.வெ.க தொண்டர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், ``அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா?" என த.வெ.க தலைவர் கண்டனத்தோடு கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் விஜய், ``தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது.

விஜய்

அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.

சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்." என்று பதிவிட்டிருக்கிறார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.