சீமானும், ஐபிஎஸ் அதிகாரியும் பொது வெளியில் மோதலில் ஈடுபடுவது நல்லதல்ல: கார்த்தி சிதம்பரம்..!
Webdunia Tamil January 02, 2025 10:48 PM

சீமானும் ஐபிஎஸ் அதிகாரியும் பொது வெளியில் கருத்து போதலில் ஈடுபடுவது நல்லதல்ல என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி இந்த விவகாரத்தில் தலையிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பொதுவெளியில் கருத்து மோதல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாகவே ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இருவரும் மாறி மாறி செய்தியாளர்களை சந்தித்து குற்றம் சுமத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பதில் அளித்தார்.

இருவரும் மாறி மாறி பொதுவெளியில் கருத்து மோதலில் ஈடுபடுவது நல்லதில்லை என்றும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் ஞானசேகர் தனியாக இந்த குற்றத்தில் ஈடுபட்டாரா அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தனியார்க்கு கொடுப்பதில் தவறில்லை என்றும், தனியார் பள்ளியாக மாறினாலும் அது அரசு பள்ளியாக தான் செயல்பட வேண்டும் என்றும், மாணவர்களுக்கு கட்டணம் இல்லாமல் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், கட்டணம் செலுத்தும் பள்ளியாக அது மாறிவிடக்கூடாது என்றும் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்தார்.

மேலும், மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுவதால், பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் வழங்காதது பெரிய குறையாக தெரியவில்லை என்றும் அவர் இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.