அது எதுவும் உண்மை இல்லை! தவறான தகவல் - தமிழ்நாடு காவல்துறை மறுப்பு!
Seithipunal Tamil January 05, 2025 06:48 AM

அண்ணா பல்கலை., மாணவி வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை என்று தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

மேலும், விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிட வேண்டாம். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துதுடன், புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்  என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை ஆணையாளர் மருத்துவர் புக்யா சினேஹா இகாப தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது. இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் / முன்னேற்றங்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி/பிரசுரித்து வருகின்றன. குறிப்பாக, "எதிரி ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும்". சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை எதிரியிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும்”, “திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்" என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

எனினும், இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ, கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவையாகும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக் கூடும்.

இவ்வழக்குகளின் தீவிரதன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஊடகங்கள், தனி நபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துதுடன், புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்" என்று தெரிவித்துள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.