`பாதமே நலமா?' - ஆனந்த விகடன் மற்றும் ஆர்.கே மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம்!
Vikatan January 07, 2025 03:48 AM

மக்கள் அதிக அளவில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு, நோய்கள் வருவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையுடன் கூடிய பராமரிப்பு, அவற்றுக்கு முறையான சிகிச்சை ஆகியவற்றை விளக்கி, நோயற்ற வாழ்வுக்கு வழிநடத்த ஆனந்த விகடன் குழுமம் மற்றும் ஆர்.கே நீரிழிவு கால் மற்றும் பாத சிகிச்சை மருத்துவமனை (R.K Diabetic foot & podiatry institute) இணைந்து மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி "பாதேமே நலமா?" கடந்த 05.01.2024 ( ஞாயிற்றுக் கிழமை) அன்று நடத்தப்பட்டது. இதில் சுமார் 350 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

ஆறு மருத்துவ வல்லுனர்கள் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பல்வேறு உறுப்புகள் மற்றும் நோய்கள் சம்பந்தமான தகவல்களை பகிர்ந்துகொண்டு, பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதிலளித்தனர். மருத்துவர் ராஜேஷ் கேசவன் தலைமை ஏற்று கருத்தரங்கத்தை நடத்தினார். நோயாளிகளின் சார்பாக ஒவ்வொரு விதமான கேள்விகளையும் மற்ற மருத்துவர்களிடம் கேட்க தொடங்கினார்.

பாத பராமரிப்பு மற்றும் சிகிச்சை குறித்து முதலில் உரையாட தொடங்கிய மருத்தவர் ராஜேஷ் கேசவன், "நம்முடைய பாதத்தை எப்போதும் சுத்தமற்ற பகுதியாகவே பார்க்கும் நடைமுறை உள்ளது. ஒருவரை திட்டும்போது கூட செருப்பை அலட்சியப்படுத்தி திட்டுவது தான் வழக்கம். நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவோருக்கு பாதம் சம்மந்தான பிரச்சனைகள் வரும். அவற்றுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை பெற்று பராமரிக்காமல் விடுகையில் காலினை மொத்தமாக இழப்பதற்கான வழிக்கு கொண்டு சென்று விடும். நம் இந்திய மக்கள் தொகையில் 11 சதவீதம் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்றரை கோடி மக்கள் பாதம் தொடர்பான பிரச்னையில் உள்ளனர். நம் உலகத்தில் 20 நொடிக்கு ஒரு முறை யாரேனும் பாதத்தை இழந்துக் கொண்டுதான் உள்ளனர். பாதத்திற்கு செல்லக் கூடிய நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுதல், தொற்றுகள் ஏற்படும் நிலை, வயதாகும்போது புண்கள் ஆறும் தன்மை குறைவது என இவையெல்லாம் முக்கிய காரணங்களாக உள்ளன. சரியான செருப்பு உபயோகிப்பதில் தொடங்கி சில எளிய நடைமுறைகள் மற்றும் சிகிச்சைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதில் கால் தொடர்பான பெரிய அளவிலான பிரச்னைகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள இயலும்." என்றார்.

நீரிழிவு நோயில் இதய பாதிப்பு குறித்து கூறினார் மருத்துவர் அருண் ரங்கநாதன், "முன்பெல்லாம் வயதான பின் வரக்கூடிய நோய்கள், நமது வாழ்க்கை முறை காரணமாக இளமை வயதிலேயே வந்து விடுகிறது. நீரழிவு வந்த சில ஆண்டுகளில் இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல், கண் ஆகியவை பாதிக்கப்பட ஆரம்பிக்கும். இதய இரத்தக்குழாய் பாதிப்படைவதை தவிர்க்க, முதலில் இசிஜி (ECG), கொலஸ்ட்ரால் டெஸ்ட் , இதய செயல்பாடு குறித்த டெஸ்ட் ஆகியவை எடுக்க வேண்டும். அறிகுறிகள் வெளியில் தெரியாது, அதனை புரிந்து ஆரம்பத்திலேயே டெஸ்ட் எடுத்துக்கொண்டால் ஹார்ட் அட்டாக் வருவதை தடுக்க முடியும். நமது வாழ்க்கை உணவு பழக்க வழக்கத்தை மேம்படுத்துவது அவசியம். ஆனால் சிலருக்கு அவர்களின் தலைமுறை மரபு மூலம் பாதிப்பு ஏற்படும். எனவே எல்லாரும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கிக் கொள்வது சிறந்த அணுகுமுறையாக இருக்கும்."

கொழுப்பு கல்லீரல் பிரச்னை குறித்து விளக்கினார் மருத்துவர் தரணி, "கல்லீரல் பிரச்னை என்றாலே பொதுவாக ஆல்கஹால் உள்ளிட்ட பொருட்கள்தான் காரணம் என்று நினைக்கிறோம். அது ஒரு புறம் இருந்தாலும் ஆல்கஹால் அல்லாத கல்லீரல் தொடர்பான பிரச்னைக்கு நீரிழிவு, உடல் பருமன் சம்பந்தமான நோய்கள், உணவு முறை ஆகியவையும் காரணம். சரியான உடற்பயிற்சி, சரிவிகித உணவு மற்றும் சரியான விரதம் எடுத்துக்கொள்வதன் மூலம் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். பழங்காலத்திலிருந்து விரதம் மேற்கொள்வது நம் நடைமுறையில் இருந்தது. நமக்கு மிகவும் பயனுள்ள ஒரு மருத்துவ சிகிச்சை தான். ஆனால் அந்த நேரத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதுதான் சந்தேகம். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நோயினை பொறுத்து வேறுபடும். மருத்துவர்களிடம் விவரம் கேட்டுக்கொண்டு மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். விரதம் எடுத்துக்கொள்வது அனைத்து மதங்களிலும் உள்ளது. நமக்கு அற்புதமான உடல் நலத்தை தரக்கூடிய செயல் தான் விரதம். "

நீரிழிவு நோயினால் காலில் உணர்ச்சியற்ற தன்மை குறித்து உரையாடினார் மருத்துவர் சிந்துஜா, "காலில் சிறிய பாதிப்புகள் ஏற்படும் போதே அதனை கவனிப்பது அவசியம். காலுக்கு செல்லும் ரத்த நாளங்களில் ஓட்டம் குறைந்து காலுக்கு உணர்ச்சியற்ற தன்மை வருவது, சர்க்கரையினால் காலுக்கு செல்லக்கூடிய சத்துக்கள் குறைந்து செயல்பாடுகள் இல்லாமல் ஆகும் நிலை ஏற்படும். கால்கள் உணர்ச்சியற்று போவது, மரத்து போகுதல், புண்கள் வருவது, எரிச்சல் ஆகியவை ஏற்படும். நடப்பதில் பிரச்னைகள், காலின் விரலில் இருந்து அனைத்து பகுதிகளும் வலுவற்று போவது, அடிக்கடி தடுக்கி விழுதல் என இன்னும் சில அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் நீரிழிவு நோயின் பிறகு நரம்பு தொடர்பாக வரக் கூடியவை. இவை சர்க்கரை நோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதில்லை, பல வருடங்களுக்கு பிறகு வருவதால் நம்மிடையே அதற்கான விழிப்புணர்வு இல்லை. எனவே நீரிழிவு நோய் வந்த ஆரம்ப கட்டத்திலேயே எச்சரிக்கையாக அவ்வபோது பரிசோதனைக்கு உள்ளாக்குவது அவசியம்."

சிறுநீரகக் கோளாறு பற்றிய விவரங்களை மருத்துவர் ஜெயநிவாஷ் கூறியதாவது, "பொதுமக்களுடன் உரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருவியாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தோருக்கு நன்றி. நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் முன்னெச்சரிக்கை. கழிவுகளை வெளியேற்றுவது என்பதை தாண்டி, ரத்த அழுத்தத்தை சமநிலையாக வைத்துக் கொள்வதில் சிறுநீரகத்திற்கு அதிக பங்கு உள்ளது.

எந்த பிரச்னையும் ஆரோக்கியமான உடலுக்கு 5 முதல் 6 கிராம் வரைதான் ஒருநாளைக்கான உப்பின் அளவை பரிந்துரைக்கப்படுகிறது. இதில் சிறுநீரக பிரச்னை உள்ளோருக்கு இன்னும் அளவை குறைக்க வேண்டும். இயல்பாக நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் உணவில் உப்பின் அளவை குறைக்க தொடங்குவது அவசியம்."

தொடர்ந்த கண்காணிப்பின் அவசியத்தை விளக்கினார் மருத்துவர் ராஜேஷ் குமார், ``நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி பரிசோதனை எடுத்துக்கொள்வது அவசியம். தொடர் கண்காணிப்பின் மூலம் பிரச்னைகளை முன்பாகவே அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். சிறுநீரக செயல்பாடு, இதய செயல்பாடு, கண் மற்றும் நரம்பின் பாதிப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இதில் எதாவது ஒரு உறுப்பில் பிரச்னை இருந்தாலும் தொடர்ந்த சிகிச்சை வேண்டும். சிறுநீரகத்தில் உள்ள சர்க்கரை மற்றும் புரதச்சத்து ஆகியவற்றை பொறுத்து மருத்துவம் அமையும். நீரழிவு நோயில் இத்தனை உறுப்புகள் தொடர்பு கொண்டிருப்பது நமக்கு தெரிந்தால்தான் , அதிலுள்ள பிரச்னைகளை அறிந்து கொண்டால்தான் ஆரோக்கியம் நம் வசப்படும்."

பார்வையாளர்கள் முன்வைத்த சில கேள்விகள் மற்றும் அதற்கான விளக்கங்களில் சில:

இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் நிறைய மருத்துவ ஆலோசனைகள் சொல்கின்றனர். அதனை நம்புவதா? வேண்டாமா?

"சமூக ஊடங்களில் மருத்துவ ஆலோசனை கொடுக்கும் அனைவரும் மருத்துவர்கள் அல்ல. முறையான சான்றிதழ்கள் இல்லாமல் மருத்துவர்கள் போல் அறிவுரை கூறி வருகின்றனர். மேலும் ஒவ்வொருவரின் மருத்துவ சிகிச்சையும் வேறுபட்டது. யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடங்களில் சொல்லும் தகவல்களை நம்ப வேண்டாம். மருத்துவர்களை நேரடியாக அணுகுவதுதான் சிறந்தது."

ஒரு நாளுக்கு எவ்வளவு அளவு தண்ணீர் குடிப்பது குறித்து தொடர்ந்து சந்தேகம் இருக்கு. எனக்கு சர்க்கரை நோய் இருக்கு அடிக்கடி சிறுநீர் வருவதால் நைட்ல தூக்கம் கெடுது. அதற்கு என்ன பண்ணலாம்?

"பொதுவாக தண்ணீர் ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு 4 லிட்டர் வரை அவசியம். ஆனால் சிறுநீரகக்கல் அல்லது வேறு ஏதேனும் பிரச்னை உள்ளோருக்கு அதன் அளவு மாறுபடும். மருத்துவரிடம் கேட்டுக்கொள்வது முக்கியம். காலையில் இருந்து சரியாக அளவு பிரித்து அந்தந்த நேரத்தில் நீர் அருந்துவது முக்கியம். ஒரே அடியாக அதிக நீர் எடுத்துக் கொள்ள வேண்டாம். இரவு உறங்கும் முன்பு அருந்த வேண்டாம். தேவை ஏற்பட்டால் அருந்தலாம். காலை எழுந்ததும் தண்ணீர் குடிப்பது அவசியம்."

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, அவரது நகைச்சுவையுடன் கூடிய கருத்து நிறைந்த பேச்சால் பார்வையாளர்களின் செவிக்கு விருந்தளித்தார். நிகழ்வை ஏற்பாடு செய்த ஆனந்த விகடன் குழுமம், ஆர்.கே நீரிழிவு மற்றும் பாத சிகிச்சை மருத்துவமனை மற்றும் விகடன் வாசகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாட ஆரம்பித்தார் பேச்சாளர் ராஜா, " வாசகர்கள் மேல் அன்பு கொண்ட ஆனந்த விகடன் குழுமம் இந்த விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்தது பாராட்டத்தக்க விஷயம். ஆண்டு தொடக்கத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இவ்வளவு மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மிகவும் அபூர்வம். கடவுளை "பாதாதி கேசம்" என்றுதான் வர்ணிக்க தொடங்குவார்கள். ஶ்ரீரங்கம் கோவிலில் பாத சேவை தான் மிக முக்கியமாக உள்ளது. 'பாதக்கமலம்' என்று குறிப்பிடுவதுண்டு. பாதத்தை பற்றி இலக்கியங்களில் பார்க்க முடியும்.

மருத்துவ வல்லுநர்கள் பாத ஆரோக்கியம் குறித்து கருத்தரங்கம் நடத்தியது மிகவும் பயனுள்ள விஷயம். தினமும் பல்வேறு வகையான நோயாளிகளை சந்திக்கும் மருத்துவர்கள், நமது நோயினை தீர்த்து, ஆரோக்கியமாக வாழ அக்கறை காட்டும் மருத்துவர்களுக்கு நாம் நன்றியுடன் இருப்பது அவசியம். இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் நமது உடல் அசைவுகள் குறைய தொடங்கியதே பல்வேறு நோய்களுக்கு காரணம். வாழ்க்கையில் சில நியமங்களை கடைபிடிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து இரவில் வேகமாக தூங்குவது நமது ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுக்கும். இயற்கையோடு ஒன்றி அதனை பார்த்துக்கொள்வது நமது பிரச்னைகளை தீர்க்கும். குடும்பத்தினரோடு நேரம் செலவழியுங்கள். மகிழ்ச்சிகரமான மற்றும் நலமான ஆண்டாக இது அமைய வாழ்த்துக்கள்" என பல்வேறு விசயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

மிக சிறப்பாக நடந்து முடிந்த "பாதமே நலமா?" விழிப்புணர்வு நிகழ்வுக்கு பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக கூறினார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.