பெண்களே உஷாராக இருங்க... இது போல ஆட்டோவிலோ, பேருந்திலோ, காரிலோ பயணிக்கும் போது பண்ணாதீங்க. கை, சிரம் வெளியே நீட்டாதீர்கள் என்று பல முறை வேடிக்கையாக படித்திருப்போம். ஆனால் ஒரு உயிரையே இந்த செயல் காவு வாங்கியிருக்கிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஓடும் ஆட்டோவில் இருந்து விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே இலவும் தடத்தில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுல்பர் நிஜாஸ் (30). இவர் நெடுங்கண்டம் நகரில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து தலை சுற்றியதால், மருத்துவமனைக்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார்.
அப்போது சுல்பர் நிஜாஸ் வாந்தி எடுப்பதற்காக ஆட்டோவில் இருந்து தலையை வெளியே நீட்டிய போது, திடீரென அவர் நிலை தடுமாறி ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நெடுங்கண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சுல்பர் நிஜாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நெடுங்கண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.