கேத்தன் பரேக், 24 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் ஆக மோசமான நிதி முறைகேட்டில் ஈடுபட்டு இந்தியப் பங்குச் சந்தையை ஆட்டம் காணச் செய்தவர்.
அவரது முறைகேடு காரணமாக 2001ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியப் பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது.
முறைகேட்டில் அவர் ஈடுபட்டது குறித்து விசாரணை நடைபெற்ற பின்னர், அவர் எந்தவொரு பங்கு வர்த்தகத்திலும் ஈடுபடக்கூடாது என்று கடந்த 2003ஆம் ஆண்டு அவருக்கு செபி 14 ஆண்டு தடை விதித்தது.
நிறுவனத்தில் இருப்பவர்களே முதலீட்டாளர்கள் போல அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்கும் ‘இன்சைடர் டிரேடிங்’கிற்கு உதவுதல், வங்கியில் உள்ள பணத்தைச் சட்டவிரோதமாக பங்குச் சந்தைக்கு மாற்றி விடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டது உறுதியான பின்னர் அவருக்கு அந்தத் தடை விதிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்க நிறுவன நிதியைப் பயன்படுத்தி பங்குச் சந்தையில் அவர் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்று மீண்டும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை (ஜனவரி 2) செபி தனது இணையத்தளத்தில் வெளியிட்டது.
தாம் நேரடியாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது என்பதால், இதர தரகர்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மூலம் 2023 ஜூன் வரை ஈராண்டு காலம் அவர் வர்த்தகம் புரிந்ததை அதிகாரிகள் விசாரித்துத் தெரிந்து கொண்டனர்.