டி-மார்ட் ரிடைல் கடைகளின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர் மார்க்கெட் அக்டோபர்-டிசம்பர் 2024 காலாண்டில் நிகர லாபம் ரூ.659.6 கோடியை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டு அதே காலாண்டில் பதிவான ரூ.623.6 கோடியுடன் ஒப்பிடுகையில் வருடாந்திர அடிப்படையில் 5.8% அதிகமாகும். இதேபோல் டிசம்பர் காலாண்டிற்கான வருவாயும் 14.4% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்து ரூ.14,444.5 கோடியை எட்டியது.
இந்த சிறப்பான காலாண்டு முடிவுகள் தான் இன்று டி-மார்ட் பங்கு விலை தாறுமாறாக உயர்த்தியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் டிமார்ட்-ன் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் 17 சதவீதம் வரையில் உயர்ந்து அதிகப்பட்சமாக 4165 ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது 11.45 சதவீதம் உயர்வுடன் 4,035 ரூபாயாக உள்ளது. ஆனாலும் இதன் 52 வார உச்சமான ரூ.5,484.00 க்கு கீழேயே உள்ளது.
டிமார்ட் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் மூலம் ஏற்பட்ட பங்கு விலை உயர்வு இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை 2.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் பிரோக்கரேஜ் கருத்துக்கள் வேறுபடுகின்றன, டிசம்பர் காலாண்டில் வலுவான வருவாய் வளர்ச்சி சந்தையால் வரவேற்கப்பட்டாலும், பிரோக்கரேஜ் நிறுவனங்கள் கலவையான கருத்துக்களை வெளிப்படுத்தின.மார்கன் ஸ்டான்லி, டி-மார்ட்டின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்தாலும் அதன் வரலாற்று சிறப்பு அம்சமான சராசரி வருவாய் வளர்ச்சி அளவீடான 20 சதவீதத்தை ஒப்பிடுகையில் சற்று குறைவு தான். ஆனால் சந்தை கணிப்புகளை காட்டிலும் 1 சதவீதம் அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது, இதேபோல் கடைகளின் விரிவாக்க அளவீடு 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மார்கன் ஸ்டான்லி அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகளின் டார்கெட் விலையை 3702 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.