திருச்சி மாவட்டத்தில், உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களுக்கு நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் செயலை டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் என்பவர் செய்து வந்தார்.
இது தொடர்பாக ஏராளமானோர் புகார் அளித்து வந்தனர். இதையடுத்து, டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன், அவரது கடையில் பணியாற்றி வந்த ஜெயராமன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்ததுடன், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தும் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "உடல் உறுப்புகளை மாற்றம் செய்வதற்கான உரிய சான்றிதழை நான் பெறவில்லை. இதை சட்டபூர்வமாக தவறு என்று சொன்னார்கள். டிஐஜி வருண்குமாரின் ஆலோசனையின்படி எனக்கு கவுன்சிலிங் கொடுத்தார்கள்.
இதற்கான முறையான சான்றிதழ் பெறாமல் என்னை போல உடல் உறுப்புகளை மாற்றம் செய்யும் வேலையை யாரும் செய்யாதீர்கள். இல்லையென்றால் என்னைப்போல பல விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆதலால் இம்மாதிரி யாரும் செய்யாதீர்கள். இனிமேல் இந்த மாதிரியான எவ்வித செயல்களிலும் நான் ஈடுபட மாட்டேன்" என்று தெரிவித்தார்.