`5 ஸ்வீட் பாக்ஸுகள்; ஏலம்போடும் சீனியர்' டு `துணை முதல்வருக்குக் குறி..!' - பரபர கழுகார் அப்டேட்ஸ்
Vikatan January 09, 2025 10:48 PM
ஏலம்போடும் சீனியர் புள்ளி!‘ஐந்து ஸ்வீட் பாக்ஸுகள்...’

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, மாவட்டக் கழகங்களை மாற்றியமைத்துவருகிறது சூரியக் கட்சி. அதற்காக ஒன்றியங்களைப் பிரித்தும், புதிய ஒன்றியச் செயலாளர்களை நியமித்தும் வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி, ஒன்றியச் செயலாளர் பதவிகளுக்கான இடங்களை நிரப்புவதில், சுறுசுறுப்பாக `கல்லாகட்டிவருகிறாராம் அறிவாலயத்தின் சீனியர் புள்ளி ஒருவர். தலைநகரின் புறநகரில், ஆளும் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஒருவர் சமீபத்தில்தான் மரணமடைந்தார். அவர் மறைந்து 16-ம் நாள் காரியம்கூட இன்னும் முடியவில்லை. அதற்குள்ளாக அவர் வகித்துவந்த ஒன்றியச் செயலாளர் நாற்காலிக்குப் புதியவரை நியமிக்க, ‘ஐந்து ஸ்வீட் பாக்ஸுகள்’ என்று ஏலம்போட்டிருக்கிறாராம் சீனியர் புள்ளி. ரியல் எஸ்டேட் அதிகம் நடக்கும் ஏரியா என்பதால்தான் இந்த கிராக்கியாம். இது தொடர்பாகத் தலைமைக்குப் பலமுறை புகார் அனுப்பியும்கூட, சீனியர் புள்ளிமீது எந்த நடவடிக்கையும் இல்லையாம். அந்த அளவுக்கு ‘கட்சியின் சீனியர் புள்ளிகள் அனைவரையும் ‘அமைப்பாக’ அவர் கைக்குள் போட்டுவைத்திருக்கிறாராம்!

கண்ணீரோடு சிரிக்கும் பவன் புள்ளிகள்!மல்லுக்கட்டிய ‘கும்ப’ நகரக் கதர்கள்…

கதர்க் கட்சியைச் சேர்ந்த ‘கும்ப’ நகரத் தலைக்கும், அதே நகர சூரியக் கட்சியின் துணைத் தலைக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே ஏழாம் பொருத்தம்தான். சமீபத்தில் நடந்த மாமன்றக் கூட்டத்திலும், ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக போலீஸ் வரை புகார் போனது. இந்த விவகாரத்தைப் பேசி முடிக்க, சூரியக் கட்சியின் மேலிடத்திலிருந்து கதர்த் தலைமைக்கு உத்தரவு பறந்திருக்கிறது. இதையடுத்து, நகரத் தலை, மாவட்ட கதர் எம்.பி., மாவட்டத் தலைவர் ஆகியோரை பவனுக்கு அழைத்து விசாரித்திருக்கிறது மாநிலத் தலைமை. விசாரணையின்போது, பஞ்சாயத்துக்கு வந்த மூவருக்கும் இடையில் வார்த்தைப்போர் வெடித்து ரணகளமாகியிருக்கிறது. அவர்கள் மூவரையும் சமாதானப்படுத்தித் திருப்பியனுப்புவதற்குள், மாநிலத் தலைமையின் நட்டு போல்டெல்லாம் கழன்றுவிட்டதாம். ‘ஒரு பிரச்னையைச் சரிசெய்யக் கூப்பிட்டா... பத்து பிரச்னையை புதுசா ஆரம்பிக்கிறாய்ங்கய்யா...” என்று பவன் புள்ளிகள் கண்ணீரோடு சிரிக்கிறார்கள்!

கவலையில் உளவுக் காக்கிகள்!தென்மாவட்டப் பதற்றம்...

தென்மாவட்டங்களில் சமுதாயரீதியாக நடந்துவரும் மோதல்களில், சர்வசாதாரணமாகப் படுகொலைகள் நடந்துவருகின்றன. ‘இதைக் கட்டுப்படுத்த, லோக்கல் போலீஸார் முதல் சென்னையில் இருக்கும் சட்டம் - ஒழுங்கு உயரதிகாரிகள் வரை யாருமே ஆர்வம் காட்டுவதில்லை’ என்ற புலம்பல்கள் காக்கி வட்டாரத்திலேயே ஒலித்துவருகின்றன. இந்த நிலையில், தென்மாவட்டம் ஒன்றில் சமுதாயரீதியாக வலம்வரும் ஒரு ரெளடிக்கு எதிராக, நாள் குறித்து வைத்திருக்கிறதாம் பூட்டு மாவட்ட ரெளடிக் கும்பல் ஒன்று. ‘இந்த விவகாரத்தில் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் தமிழ்நாடு முழுக்க, சாதிய மோதல் வெடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இது குறித்துப் பலமுறை மேலிடத்துக்கு `நோட்’ போட்டும், எந்தப் புண்ணியமும் இல்லை’ என்று கவலை தெரிவிக்கிறார்கள் உளவுக் காக்கிகள்!

பலிகடாவாகும் நிலவுப்புள்ளி!மாநிலத் தலைமை - மாஜி மோதல்…

தேசியக் கட்சியின் மாநிலப் புள்ளி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டாராம். ஆனால், மாநிலப் புள்ளியின் முயற்சிகளுக்குத் தடையாக அவருடைய மாவட்டத்தைச் சேர்ந்த இலைக் கட்சி மாஜி ஒருவரே குறுக்கே நிற்கிறாராம். இதனால் கடுப்பாகியிருக்கும் மாநிலப்புள்ளி, தனது டெல்லி சோர்ஸ் மூலமாக மாஜிக்குக் குடைச்சல் கொடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார். முதற்கட்டமாக, மாஜியின் நிழலாக இருந்துவரும் நிலவுப்புள்ளிமீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிந்திருக்கும் வழக்கு விவரங்களையெல்லாம் எடுத்து, டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார்.

டெல்லித் தலைமையோ, ‘தமிழ்நாட்டில் இலைக் கட்சியுடன் நாம் கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு மாஜி ஒத்துழைக்கிறாரா என்று பார்ப்போம். அப்படி எதுவும் நடக்காதபட்சத்தில், நடவடிக்கை எடுக்கலாம்’ எனச் சொல்லி, வழக்கு விவரங்களை பத்திரப்படுத்தியிருக்கிறதாம். இப்படி, மாநிலத் தலைமைக்கும் – மாஜிக்கும் இடையிலான மோதலில், ‘நம் தலை உருட்டப்படுகிறதே…’ என்ற பதற்றத்தில் படபடத்துக் கிடக்கிறாராம் நிலவுப்புள்ளி!

கற்றுக்கொடுக்கும் மேலிடம்!துணை முதல்வருக்குக் குறி…

ஆளுநர் வெளிநடப்பு, வெளியேற்றம் என்று சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அனல் பறந்தது. 11-ம் தேதி வரை நடக்கும் சட்டமன்ற நிகழ்வுகள், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு பிப்ரவரி பட்ஜெட்டுடன் மீண்டும் தொடங்கும். ‘இந்தக் கூட்டத்தொடரில் எப்படியாவது ஸ்கோர் செய்துவிட வேண்டும்’ என்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி திட்டமிடுகிறாராம்.

உதயநிதி

அதற்காக, துணை முதல்வர் உதயநிதியைக் குறிவைத்துக் கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆயத்தமாகிவருகிறதாம் அ.தி.மு.க. இந்தத் தகவல் உளவுத்துறை மூலம் மேலிடக் காதுகளை எட்ட, சட்டமன்றச் சமாளிப்பு வித்தைகளை துணை முதல்வருக்கு கற்றுக்கொடுத்து தயார்படுத்துகிறார்களாம். முதற்கட்டமாக, முதல்வர் டேபிளில் இருக்கும் அனைத்து ஃபைல்களும், துணை முதல்வர் டேபிளிலும் ஒரு காப்பி வைக்கப்பட்டுவருகிறதாம்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.