ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவரது மறைவையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியை காலியானதாக அறிவித்து தேர்தல் நடைபெறும் தேதியையும் அறிவித்தது.
அதன் படி அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேளையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை, எல். முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டுள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தேசிய தலைமையிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், ஈரோடு கிழக்கு தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்கலாம் என்று பாஜக நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விரும்பவில்லை என்றுத் தகவல் வெளியாகியுள்ளது.