இதுவரை ஆடு மேய்க்கிற யாரையாவது நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நிறுத்தியிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியவருக்கு, அக்கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி கொடுத்த பதில் கவனம் பெற்று வருகிறது.
அதில், 'ஆடு, மாடு மேய்ப்பவரை வேட்பாளர் ஆக்காமல், படித்தவரை ஏன் வேட்பாளர் ஆக்கினீர்கள்?' என்பது உங்களது பதிவில் இருக்கும் மறைபொருள்!
'படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; இனி படிக்காதவர்களே இல்லை எனும் நிலையை உருவாக்குவது அடுத்த வேலை' என முழக்கத்தை முன்வைத்தவர் அண்ணன் சீமான்.
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவில், ஆரம்பக்கல்வி தொடங்கி ஆராய்ச்சிக்கல்வி வரை இலவசம் என்றுதான் சொல்லப்பட்டு இருக்கிறது.
'படிப்பை விட்டுவிட்டு, ஆடு, மாடு மேய்க்கச் செல்லுங்கள்' என எந்த இடத்திலும் அண்ணன் சீமான் கூறியது இல்லை. இருந்தும், 'படிக்காமல் ஆடு, மாடு மேய்க்கச் செல்லுங்கள்' எனக் கூறுவது போல ஒரு கருத்துருவாக்கத்தைத் திரும்பத் திரும்பச் செய்வது என்ன மாதிரி அரசியல் நேர்மை என்பது புரியவில்லை.
கல்வியைப் பொதுமை ஆக்க வேண்டுமெனக் கூறும் அண்ணன் சீமான் அவர்கள், ஆடு, மாடு வளர்ப்பை சந்தைப்படுத்தி, அதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவோம் என்கிறார். அதே கருத்தை, அறிஞர் அண்ணாவும்கூட கூறி இருக்கிறார். 'அண்ணாவின் தமிழ்க்கனவு' நூலில் அச்செய்தி இடம்பெற்று இருக்கிறது.
படிக்காதவர்கள் மட்டும்தான் ஆடு, மாடு வளர்ப்பை செய்ய வேண்டும் என்று இருக்கிறதா? படித்தவர்கள் அதனைச் செய்யக் கூடாதா? ஆடு, மாடு வளர்ப்பு இழிவானக் தொழிலா? எவரையும் சுரண்டாத, எவரையும் அடிமைப்படுத்தாத எந்தத் தொழிலும் இழிவு இல்லை.
நிறைவாக, படித்துவிட்டு ஆடு, மாடு வளர்ப்பையும், விவசாயத்தையும் செய்பவர்களும் வேட்பாளர்களாக நாம் தமிழர் கட்சியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அவ்வளவு ஏன்? நீங்கள் சுட்டிக் காட்டிய ஈரோடு கிழக்கு வேட்பாளர் அக்கா சீதாலட்சுமி அவர்கள் கூட படித்துவிட்டு, விவசாயம் செய்பவர்தான்" என்று இடும்பாவனம் கார்த்தி பதில் கொடுத்துள்ளார்.