பெரியார் குறித்து சீமான் சொன்னதை அப்பவே சொன்னார் சோ ராமசாமி... பின் மன்னிப்பும் கேட்டார்!
Dinamaalai January 16, 2025 12:48 AM

சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த கருத்தைத் தான் மறைந்த துக்ளக் ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி 52 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதாக மூத்த பத்திரிகையாளர் மணி கூறியிருக்கிறார். பெரியார் குறித்து சோ ராமசாமி அப்போது கூறிய போது, திராவிடர் கழகம் தொடுத்திருந்த வழக்கால், அவர் மன்னிப்பு கேட்ட சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார்.

தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் பெரியார் குறித்த விவகாரம் பற்றி மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், “பெரியார் குறித்து ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று புரியவில்லை. என்ன காரணம் இருந்தாலும், சீமான் பேசுவது தவறு. பேசுவதற்கான ஆதாரத்தை கேட்டால், நீங்கள் ஆதாரத்தை பூட்டி வைத்துள்ளீர்கள். நான் எப்படி கொடுப்பது என்று பதில் அளிப்பது ஏற்புடையதல்ல. இது தவறான, அராஜகமான பதில்.

52 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஒரு தலைவரை பற்றி ஒரு கருத்து சொல்கிறீர்கள். அப்படி சொல்லும் போது, உங்களிடம் தகுந்த ஆதாரம் இருக்க வெண்டும். ஆதாரம் இல்லாததற்கு ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் ஏற்புடையதல்ல. இது சட்டத்தின் பார்வையிலும் நிற்காது.

சீமான் கூறிய கருத்தை மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியும் 52 ஆண்டுகளுக்கு முன்பு கூறி இருக்கிறார். “உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, சகோதரியோ.. அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு” என்று பெரியார் கூறியதாக சீமான் பேசி இருக்கிறார். பெரியார் அப்படி எங்கேயும் சொல்லவில்லை என்பது தான் உண்மை. இதற்கான ஆதாரம் சீமானிடம் இருக்க வேண்டும். இதே தவறை 1973ல் சோ ராமசாமியும் செய்தார். அப்போது திராவிடர் கழகம் சோ ராமசாமி மீது வழக்கு போட்டது. அதன்பின் நீதிமன்றத்தில் சோ ராமசாமி மன்னிப்பு கேட்டார்.

இந்த மாதிரியான விஷயங்களை பேசும் போது ஆதாரம் இருக்க வேண்டும். பெரியாரின் அனைத்து எழுத்துகளையும் பொதுவெளியில் வைக்க மறுக்கிறார்கள் என்பது நியாயமான குற்றச்சாட்டு தான். ஆனால் சீமான் பேசுவது சட்டப்படியும் தவறு தான். சீமானின் கருத்துகள் தண்டனைக்குரிய குற்றம். இது ஒரு அரசியல் தற்கொலை.

பெரியாரை வழிக்காட்டியாக ஏற்கிறோம் என்று பேசியவர் தான் சீமான். தற்போது பெரியார் சொல்லாத ஒன்றை சொல்லியதாக சீமான் பேசுவது தான் தவறு. பெரியாரை விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தமிழக அரசியலில் பெரியாரை விமர்சித்து ஒரு வாக்கும் யாருக்கு கிடைக்காது. 8 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில் அதனை கெடுத்து தலையில் மண்ணை போட்டுக் கொள்ளும் பணியை தான் சீமான் செய்கிறார். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சிக்குள்ளும் அதிருப்தி இருப்பதாக  தான் கருதுவதாக மணி தெரிவித்துள்ளார்.

!

 .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.