"நாட்டு மாடுகள் இல்லை என்றால் இயற்கை விவசாயம் இல்லை" - ஐஐடி இயக்குநர் காமகோடி நெகிழ்ச்சி உரை
Vikatan January 16, 2025 02:48 AM
சென்னை மேற்கு மாம்பலத்தில், 'ஸ்ரீமகாபெரியவாளின் கர்ப்பக்ரஹம்' என்று போற்றப்படும் `மாம்பலம் கோ சம்ரக்ஷண சாலா' வின் 49 வது மாட்டுப்பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ஆன்மிக அன்பர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி வீழிநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இன்று காலை 7 மணிக்கு மங்கல இசையுடன் நிகழ்வு தொடங்கியது. அதன் பின் வேத வித்யா சமிதி குழுவினரின் வேதபாராயணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஹரே கிருஷ்ணா குழுவினரின் பஜனையும் மாதங்கி சங்கர் குழுவினரின் தேவார திருப்புகழ் இன்னிசை நிகழ்வும் நடைபெற்றது.

ஐ ஐ டி இயக்குநர் காமகோடி

நிகழ்வின் தலைமையுரையை ஸ்ரீ பி.ஹரிதாஸ் வழங்கினார். தொடர்ந்து கோ சம்ரக்ஷண சாலாவின் செயலாளர் ஸ்ரீ 'விநாயகர்' வி முரளி வரவேற்புரை ஆற்றினார். அப்போது, "மகாபெரியவர் 1962-ம் ஆண்டு வந்து தங்கிய இடம் இது. அதுதான் அவர் சென்னைக்குக் கடைசியாக வந்தது. அவரின் ஆணைப்படிதான் 1967 - ல் இங்கு `கோ சாலா' அமைக்கப்பட்டது. இங்கு பசுக்களைப் பராமரித்து அவற்றுக்கு உரிய சேவைகள் செய்து வருகிறோம். அதற்காக யாரிடமும் பணம் கேட்டது கிடையாது. யாராவது விருப்பப்பட்டுக் கொடுத்தால்தான் பெற்றுக்கொள்வோம். மேலும் இந்த கோசாலையில்தான் அங்கபிரதட்சிணம் செய்யும் வழக்கம் உள்ளது. இங்கு அங்கப்பிரதட்சிணம் செய்து தங்கள் கஷ்டங்கள் நீங்கி நல்வாழ்வு பெற்றவர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள். நாடு சுபிட்சம் அடைய எல்லோரும் வீடுகளில் நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டும்." என்று குறிப்பிட்டார்.

அதன்பின் காமகோடி சிறப்புரை ஆற்றினார்.

"காஞ்சி மகாபெரியவருக்கு வேத பரிபாலனம் ஒரு கண் என்றால் பசுப் பாதுகாப்பு ஒரு கண். அதனால்தான் ஓரிக்கையில் மகாபெரியவர் நினைவு மண்டபம் ஏற்படுத்தியபோது அங்கு வேதபாடசாலையும் வைத்தோம். கோசாலையும் வைத்தோம். 4 மாடுகளுடன் தொடங்கிய அந்த கோசாலையில் இன்று 200 மாடுகள் உள்ளன. `தெய்வத்தின் குரல்' நூலின் மூன்றாம் பாகத்தில் மகாபெரியவர் பசுப்பராமரிப்பு குறித்துச் சொல்கிறார். ஒன்றரைப் பக்கம்தான் என்றாலும் அதில் இல்லாத விஷயங்களே இல்லை.

இன்றைக்கு அநேகரும் ஆர்கானிக் ஃபார்மிங் (இயற்கை விவசாயம்) குறித்துப் பேசுகிறார்கள். மாடுகள் இல்லை என்றால் இயற்கை விவசாயம் என்பதே இல்லை எனலாம். மாடுகள், நாம் வேண்டாம் என்று நினைக்கும் புல், கழுநீர், வைக்கோல் ஆகியவற்றை உண்டு நமக்குப் பயன்படும் பால், தயிர், வெண்ணெய், நெய் ஆகியவற்றைக் கொடுக்கிறது. இதைப்போன்ற ரிட்டெர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் வேறு எங்கும் கிடைக்காது. இவை தவிர்த்து கோமயத்தில் இருந்து பஞ்சகவ்யம் முதலான இயற்கை உரம் கிடைக்கிறது.

பசுக்கள் ஊர்வலம்

இன்று சந்தையில் கிடைக்கும் வேதியியல் உரங்கள் பெரும்பாலும் பூச்சிக்கொல்லிகள். பூச்சியைக் கொல்ல வீசப்படும் உரங்கள் பயிர்களில் தங்கி அதை உட்கொள்ளும் மனிதர்களையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்கிறது. கோமயத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரம் பூச்சிக் கொல்லி அல்ல. பூச்சி விரட்டி. அதை நினைவில் கொள்ளவேண்டும். பூச்சிக்கொல்லி பயன்படுத்திய பயிர்களை உட்கொண்டால் கேன்சர் வருகிறது என்கிறார்கள். அதனால்தான் இன்று உலகம் முழுவதும் இயற்கைப் பொருட்களின் பின் செல்கிறார்கள்.

ஆனால் இயற்கை விவசாயம் என்பது எளிமையானது அல்ல. ஆரம்ப காலத்தில் மிகுந்த நஷ்டத்தைக் கொடுக்கும் என்பதை என் சொந்த அனுபவத்தில் கண்டவன். ஓர் இயற்கை விவசாயியாக நான் என் நிலத்தை மீட்டெடுக்க மண் வளத்தைப் பெருக்க ஏழு ஆண்டுகள் ஆயின. இப்போது அதில் தற்போது, 'ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங்' சாத்தியமாகியிருக்கிறது.

கோ சம்ரக்ஷணம் எனப்படும் பசுப்பாதுகாப்பு மதம் சார்ந்த விஷயம் அல்ல. அது சமூகம் சார்ந்த விஷயம். ஒரு மனிதன் வாழ என்னென்ன தேவையோ எப்படிப்பட்ட சூழல் தேவையோ அதைப் பசுக்களால் மனிதர்களுக்கு வழங்க முடியும். எனவே பூர்விக கிராமத்தில் இடம் வைத்திருப்பவர்கள் நிலம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து அதை விற்றுவிடாதீர்கள். அங்கே ஒரு நாட்டு மாடாவது வாங்கி வளருங்கள்" என்றார் ஐ ஐ. டி இயக்குநர் காமகோடி.

அதன்பின் பசுக்களுக்கு சுவாமி பிரம்ம யோகானந்தர் பூஜைகள் செய்தார். அதைத் தொடர்ந்து பசுக்கள் மாட வீதியில் ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டன. இந்த அற்புதமான நிகழ்வில் மாம்பலம் வாழ் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு பசுக்களை வழிபட்டுச் சென்றனர்.

Photos : Naveen

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.