``நீர் ஆதாரத்தை வழங்கியவருக்கு மரியாதை" -தேவராட்டம், சிலம்பாட்டத்துடன் தேனியில் பென்னிகுக் பொங்கல்!
Vikatan January 16, 2025 04:48 AM

முல்லைப்பெரியாறு அணை தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீராதாராமாக உள்ளது. எனவே விவசாயிகள் பலரின் வீடுகளிலும் அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் படம் கடவுளுக்கு நிகராக மாட்டப்பட்டிருக்கிறது. பென்னிகுக் தமிழர்களின் பாரம்பரியமான மாட்டுப்பொங்கல் தினமான ஜனவரி 15 ஆம் தேதியன்று பிறந்தவர்.

பொங்கல் வைத்த பெண்கள்

எனவே தேனி மாவட்டம் பாலார்பட்டி கிராம மக்கள் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15 ஆம் தேதியை பென்னிகுக் நினைவு பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இவ்விழாவை பாலார்பட்டி கர்னல் பென்னிகுக் எழுச்சி பேரவை தலைவர் ஆண்டி தலைமையில், பொங்கல் விழாவையொட்டி விரதமிருந்த பெண்கள் ஊர் மந்தையில் வரிசையாக பொங்கல் வைத்து மேளதாளத்துடன், தேவராட்டம், சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக பென்னிகுக் நினைவு மண்டபத்திற்கு சென்றனர்.

ஊர்வலம்

பென்னிகுக் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, நெற்கதிர்கள், வாழைப்பழம், பொங்கல், தேங்காய் வைத்து வழிபாடு செய்தனர். இதில் சுற்றுப்புற கிராம மக்கள், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள், மலேசியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாலார்பட்டியைச் சேர்ந்த ஆண்டி, "எனது ஒருங்கிணைப்பில் பாலார்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் கடந்த 2000-ல் முதல் முறையாக பென்னிகுக் பிறந்தநாள் விழாவை பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2003-ல் பாலார்பட்டி பொதுமக்கள் சார்பில் வெளியிட்டோம். அதே ஆண்டில் பென்னிகுக்கின் நேரடி வாரிசான பென்னிகுக் மகள் வழி பேரன் வழக்கறிஞர் ஸ்டூவர்ட் சாம்சனை பாலார்பட்டிக்கு அழைத்து வந்து பொங்கல் விழா கொண்டாடினோம்.

காளைகளுடன் ஊர்வலம் வந்த காளையர்கள்

கடந்த 2011-ல் முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக முதன்முதலாக பாலார்பட்டி மக்கள் தான் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவற்றையெல்லாம் தென்மாவட்ட மக்களின் நீராதாரத்தை வழங்கியவருக்கு உணர்வுப் பூர்வமாக செய்யக் கூடிய மரியாதையாகத் தான் பார்க்கிறோம்" என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.