மேற்கு கரையின் ஜெனின் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் ஜெனின் நகரில் செயல்பட்டு வந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 06 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஜெனின் நகர் பிரிவு முக்கிய தளபதியும் அடங்குவதாக கூறப்படுகிறது.
சுமார் 2 மாதங்களுக்குப் பின் மேற்கு கரையில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை நிர்வகித்து வரும் அதிபர் முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு படைகளும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஜெனின் பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுவினரை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 07ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்ததோடு, இஸ்ரேலில் இருந்து 251 பேரை காசா முனைக்கு பணய கைதிகளாக ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டது.
அத்துடன், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும்,போரை நிறுத்தவும் இஸ்ரேல், ஹமாஸ் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் போர் நிறுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் போர் நிறுத்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையிலேயே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, பாலஸ்தீனத்தின் மேற்கு கரையிலும் ஹமாஸ் ஆயுதக்குழுவின் சில பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத், பாப்புலர் பிரண்ட் பார் ஆப் பாலஸ்தீன் விடுதலை இயக்கம் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது..