மதுரை பாலமேடு, ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர்.
இன்று காலை 07.30 மணியளவில் தொடங்கிய போட்டி மாலை 05.40 மணியளவில் நிறைவு பெற்றது. மொத்த 10 சுற்றுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நேரமின்மை காரணமாக 09 சுற்றுகளாக குறைக்கப்பட்டது. இதில் சுமார் 930 காளைகள் களம் கண்டன.
இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், நத்தத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் பார்த்திபன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார். 12 காளைகளை அடக்கி 02-வது இடத்தை மஞ்சம்பட்டி துளசிராம் பிடித்துள்ளார். பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 03-வது இடத்தை பிடித்துள்ளார்.
அத்துடன், இன்றைய போட்டியில் மாடுபிடி வீரர்கள் 24 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 15 பேர் மற்றும் பார்வையாளர்கள் 13 பேர் என மொத்தம் 52 பேர் காயம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல் பரிசு வென்ற வீரர் நத்தம் பார்த்திபன் மயக்கமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.