உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், துணை முதல்வரின் மகன் இன்பநிதி உள்ளிட்டவர்கள் முதல் வரிசையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது துணை முதல்வரின் மகன் இன்பநிதி, தன்னோடு வந்த நண்பர்களை முதல் வரிசையில் அமர்ந்து பார்க்க வழி செய்யும் வகையில் சற்று தள்ளி அமர முற்பட்டார்.
அப்போது அமைச்சர் மூர்த்தி எழுந்து அவரை தடுத்து நிறுத்தி, நீங்கள் இங்கேயே உட்காருங்கள் என்று கூறிவிட்டு, துணை முதல்வர் அருகில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சிலரை சற்று தள்ளி அமரும்படி கூறியதாக தெரிகிறது.
இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்விற்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், மன்னராட்சி மணப்போக்கில் இருக்கும் திமுகவிற்கு மக்கள் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் பாடம் கற்பிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் இந்த சர்ச்சை காணொளியை பதிவிட்டு, பிரபல எம்ஜிஆர் பாடல் ஆன,
"சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்" என்ற பாடலை பாடி விமர்சித்துள்ளார்.