சைக்கிள் ஓட்டி விளம்பரம் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - செல்லூர் ராஜு.!
Seithipunal Tamil January 18, 2025 05:48 AM

இன்று எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கேகே நகர் சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் 2026ஆம் ஆண்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்.

அனுபவி ராஜா அனுபவி. இருக்கும்போதே அனுபவி.. என ஆட்சியில் இருக்கும் போதே அனைத்தையும் அனுபவிப்பதில் சிறந்த குடும்பம் கலைஞர் குடும்பம் தான். மக்கள் வறுமையிலும், வறட்சியிலும் இருந்தபோது தள்ளாத வயதில் ’மானாட மயிலாட’ பார்த்தவர் கருணாநிதி. முதலமைச்சர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று சைக்கிள் ஓட்டி விளம்பரம் செய்கிறார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவுக்கு தனது மகனோடு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஒரு பெண் மாவட்ட ஆட்சியரை இருக்கையில் இருந்து எழ வைத்துள்ளார். இந்த ஆட்சியில் அதிகாரிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. உலகத் தமிழ் மாநாடு திமுக நடத்திய போது, உலகில் இருந்து வந்த அறிஞர்கள் எல்லாம் கீழே அமர வைக்கப்பட்டார்கள். 

கலைஞர் குடும்பம் மட்டும் மேடையில் அமர்ந்திருந்தனர். அனுபவிக்கிறார்கள் அனுபவிக்கட்டும். இன்னும் ஒரு வருடம் தான். அதற்கடுத்து மக்கள் இவர்களை எங்கே வைப்பார்கள் என்று தெரியாது. எம்ஜிஆரை யாரும் வென்றது கிடையாது; கடவுளை யாரும் கண்டது கிடையாது” என்றுத் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.