கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரு அருகே உல்லால் பகுதியில் கோட்டேகர் கூட்டுறவு வங்கிக்குள் இன்று காலை ஐந்து முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தனர். பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடி, கருப்பு நிற காரில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 25 முதல் 35 வயதுக்கு உட்பட்ட கொள்ளையர்கள், வங்கிக்குள் நுழைந்து, ஊழியர்களை மிரட்டி, பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.
திருடப்பட்ட தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும், கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களிடம் இந்தியிலும், கொள்ளை நடந்தபோது வங்கிக்கு அருகில் இருந்த மாணவர்களிடம் கன்னடத்திலும் பேசியதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த வங்கியில் நாய்கள், கைரேகை நிபுணர்கள் கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னதாக கர்நாடக மாநிலம் பிதர் நகரில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்ப நேற்று வேனில் வந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இதில் வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையவர்கள் பணப்பெட்டியை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த நிலையில் நேரடியாக வங்கியிலேயே நடந்த கொள்ளை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.