BB Tamil 8 Day 103: அழறதால சொன்னதெல்லாம் நியாயம்ன்னு ஆகிடாது- கடைசி நேரம்; காத்திருக்கும் ட்விஸ்ட்
Vikatan January 18, 2025 08:48 PM
இன்னமும் இரண்டே நாட்கள். இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதற்கான விடை தெரிந்து விடும். அது யாராக இருந்தாலும் தகுதியான நபரின் கையில் சென்று சேரும் போதுதான் அந்த வெற்றிக்கே ஒரு நியாயம் கிடைக்கிறது. அந்த நியாயத்தை வழங்கப் போகும் மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது அந்த பிக் பாஸிற்கே வெளிச்சம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 103

இந்த எபிசோடில் பிளாஷ்ஃபேக் கொண்டாட்ட தருணங்களைத் தவிர பெரிதாக வேறோன்றுமில்லை. இந்தத் தருணங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் நிச்சயம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பார்வையாளர்களுக்கு? எந்தவொரு க்ரூப் போட்டோவிலும் தன்னுடைய முகத்தை முதலில் தேடுவதே மனித இயல்பு. 

சபையைக் கூட்டிய பிக் பாஸ், போட்டியாளர்கள் ‘நட்பு பாராட்டிய தருணங்கள்’ அடங்கிய வீடியோ தொகுப்பை திரையிட்டார். புகைப்படங்கள் ஓவியம் போல மாறும் ஷாட்கள் நன்றாக இருந்தன. வழக்கம் போல் வீடியோ தொகுப்பு அற்புதமாக இருந்தது. தங்களின் நட்புத் தருணங்களைப் பார்த்த போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு கட்டியணைத்து தங்களின் நட்புணர்ச்சியைக் கொண்டாடினார்கள். 

திடீரென எழுந்து வந்த ராணவ், டாப் 5 போட்டியாளர்களைப் பற்றி தன்னுடைய ஒரு வரி அபிப்ராயத்தைக் கூறினார். பவித்ராவின் கேம் ஸ்பிரிட், கிங் ஆஃப் பிக் பாஸ் முத்து (ஏண்டா.. நீ வேற.. சும்மா இருடா - முத்து) ஆட்டக்காரன் ரயான், குழந்தைகளையும் கவர்ந்திருக்கும் போட்டியாளர் சவுந்தர்யா என்று பாராட்டிய ராணவ், பெண் குழந்தைகளின் கல்விக்காக விஷால் சத்தமில்லாமல் செய்து வரும் உதவிகளைப் பற்றியும் கூறி பாராட்டினார். விஷாலின் மறுபக்கத்தில் இப்படியொரு மனிதம் இருப்பது சிறப்பு. 

தர்ஷிகாவின் மரத்தடி ஞானம்  - பிக் பாஸ் வீடு

காலம் கடந்த பிறகுதான் பலருக்கு தாமதமான ஞானோதயம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் தர்ஷிகா இருக்கிறார். டாப் 5-ல் வரக்கூடிய அளவிற்கு திறமையாக ஆடிக் கொண்டிருந்த அவரை, காதல் என்னும் கனவு திசையை மாற்றி கலைத்துப் போட்டது. பின்னடைவை ஏற்படுத்தியது. அதன் விளைவு, வீட்டின் விருந்தினராக அமர்ந்திருக்க வேண்டிய பரிதாபம். 

“ரொம்ப ஃபீல் பண்றேன். ஏன் விட்டேன்னு..” என்று தர்ஷிகா அனத்துவதற்கான இன்னொரு காரணம் ஆட்டத்திலிருந்து வெளியேறியது மட்டுமில்லை. விஷால் - அன்ஷிதாவின் நெருக்கம். இதை பவித்ராவிடம் தரையில் எழுதிக் காட்டி  ரகசியமாக சொல்லிக் கொண்டிருந்தார். “அப்படியா சொல்ற.. ஃபிரெண்ட்ஸூன்னுதானே சொல்றாங்க?” என்று பவித்ரா வியக்க, “வீட்டுக்குள்ளயே இருக்கீங்க.. உங்களுக்கு தெரியலையா?” என்று சிரித்த தர்ஷிகா “எனக்கு விஷால் ஹோப் தந்தாரு. ஒருத்தரை பிடிக்கலைன்னா விட்டுட்டுன்னு வந்துடணும். விஷால் அழறதால அவரு சொன்னதெல்லாம் நியாயம்ன்னு ஆகிடாது. அதை தெளிவுப்படுத்தணும்னுதான் இந்த வீட்டுக்குள்ள வந்தேன்” என்று தான் வீட்டிற்குள் வந்த நோக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். 

தர்ஷிகா ஆட்டத்தை கோட்டை விட்டது ஒரு பக்கம் இருக்கட்டும். டாப் 5 வரிசை என்னும் முக்கியமான கட்டத்தில் இருக்கும் விஷாலுக்கு அதன் முக்கியத்துவம் புரிகிறதா, இல்லையா என்று கூட தெரியவில்லை. ஏற்கெனவே அடிபட்டும் உணரவில்லை. அது நட்பாகவே இருக்கட்டும், இந்தச் சமயத்தில் அன்ஷிதாவிடம் காட்டும் நெருக்கம், தனக்கே வினையாக வந்து சேரலாம் என்று கூடவா தெரியாது? அதிலும் தர்ஷிகாவின் எதிரிலேயே இப்படியெல்லாம் நடந்து கொள்வது அவரது உணர்வுகளைப் பாதிக்கும் என்பது கூடவா புரியாது?! விஷால் யதார்த்தமான ஆசாமியா? அல்லது சுயநலமும் தந்திரமும் நிறைந்த கபடநாடக வேஷதாரியா?

“இந்த வீட்ல ஒருத்தர் பண்றத புரிஞ்சுக்கவே முடியலை” என்று பவித்ரா நமட்டு்ச் சிரிப்பு சிரிக்க “அவங்க ஃபேக்.. அதனாலதான்” என்றார் தர்ஷிகா. “சுனிதா என்னைக் கட்டிப்பிடிச்சு அழுதாங்க தெரியுமா.. அடி வாங்கியாச்சு. இப்ப ஃபீல் பண்ணி என்ன பண்றது?” என்கிற மாதிரி பெருமூச்சு விட்டார் தர்ஷிகா. காதல் என்பது பாவமல்ல. ஆனால் ஒருவரின் இலக்கை, சரியான புரிதல் அல்லாத காதல் குலைத்து விடும் என்பதற்கான உதாரணம் தர்ஷிகா. 

போட்டியாளர்களின் ஸ்பெஷல் மோமெண்ட் வீடியோக்கள்

அடுத்த வீடியோ. போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட தருணங்கள். அதாவது குடுமிப்பிடி சண்டைகளின் தொகுப்பு. தாங்கள் இத்தனை கோபத்தையா வெளிப்படுத்தினோம் என்பதை காட்சிகளின் மூலம் கண்டு அதன் மூலம் மனமாற்றம் அடைந்தால் அதுவே இந்த வீடியோவின் வெற்றியாக இருக்கும். இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் பொருந்தும். தங்களின் கோபத் தருணங்களை மனச்சாட்சி என்னும் காமிராவின் மூலமாக எப்போது வேண்டுமானாலும் ரீவைண்ட் செய்து  காண முடியும். 

டாப் 5 போட்டியாளர்களின் பயண வீடியோ. முதல் ஆளாக அழைக்கப்பட்டவர் சவுந்தர்யா. பிக் பாஸ் அழைப்பு வந்ததும் ‘யம்மா’ என்று உடல் அதிர்ந்து அலறினார். ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் போட்டியாளர்களின் பல்வேறு தருணங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தன. டீமிற்கு ஒரு பெரிய பாராட்டு. அவற்றையெல்லாம் சுற்றிப் பார்த்த சவுந்தர்யா “வீடியோல்லாம் போட மாட்டீங்களா?” என்று ஆசையாக கேட்க ‘உனக்கில்லாததா செல்லம்.. இதோ’ என்று சவுந்தர்யாவின் பயண வீடியோவை திரையிட்டார் பிக் பாஸ். 

வீடியோவைப் பார்த்து கண்ணீர் மல்கிய சவுண்டு “என்னோட கான்ஷியஸ் எப்பவுமே என் குரல் பற்றித்தான் இருக்கும். (அய்யோ.. இப்ப எந்த வாய்ஸ்ல பேசறேன்னு தெரியலையே?!). அந்த அளவிற்கு என் குரல் பற்றி இன்செக்யூர்டா ஃபீல் பண்ணுவேன். ஆனா பிக் பாஸ் வீடு என்னை மாத்தியிருக்கு. ஓப்பன் அப் ஆகியிருக்கேன். நானா இருந்திருக்கேன்” என்று நெகிழ்ந்தார் சவுந்தர்யா. “இது சிறு தொகுப்புதான். வெளில போய் முழுசா பாருங்க” என்றார் பிக் பாஸ். மின்சார புஸ்வாணம் திடீரென வெடித்ததில் ‘அப்பா.. அம்மா’ என்று அலறினார் சவுண்டு. ‘சொல்லிட்டு செய்யக்கூடாதா?’ என்கிற செல்லமான எச்சரிக்கை வேறு. 

சவுந்தர்யாவால்தான் பிக் பாஸிற்கே பெருமை


“என்னைப் பத்தி பெருமையா ஏதாவது சொல்ல விரும்பறீங்களா பிக் பாஸ்?” என்று கேட்டார் சவுண்டு. அதனால் பிக் பாஸிற்குத்தான் பெருமை கிடைக்கும் என்கிற பெருமிதம் சவுந்தர்யாவின் முகத்தில் தெரிந்தது. “துணிவான, நேர்மையான, நிறைவான பயணம் உங்களுடையது” என்று வாழ்த்தி அவரை அனுப்பினார் பிக் பாஸ். 

விஷாலும் அன்ஷிதாவும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போலவே உலாவுவது தர்ஷிகாவை வெறுப்பேற்றியதில் ஆச்சரியமில்லை. “அது மேல உள்ள எல்லாமே போயிடுச்சு. முதல்லயே தெரிஞ்சிருக்கணும்” என்று கசப்புடன் சிரித்த தர்ஷிகாவிற்கு பக்கத்தில் இருந்த ரியா தலையசைப்பால் ஆறுதல் சொன்னார்.

அடுத்ததாக விஷாலின் பயண வீடியோ. “சின்ன வயசுல நடந்த பர்த்டே பங்ஷன் போட்டோக்களை பெரிசானப்புறம் பார்ப்போம். அந்த வயசுக்குள்ள திரும்பிப் போயிடலாமான்னு இருக்கும். ஆனா முடியாது. அந்த மாதிரிதான் இருக்கு. இங்க வாழ்ந்த வாழ்க்கைக்குள்ள திரும்ப போக முடியாது. இது மட்டும்தான் நான்னு நெனச்சிட்டு இத்தனை நாள் இருந்தேன். ஆனா எனக்குள்ள இவ்வளவு விஷயங்கள் இருந்ததுன்னு இப்பத்தான் தெரியுது. இங்க வந்தவங்க மாதிரி சினிமாலயும் ஜெயிப்பேன்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் சொல்லி விட்டுச் சென்றார் விஷால். 

‘எனக்கு ஓட்டு போடுவீங்களா?-  கேட்ட முத்துவை கலாய்த்த பிக் பாஸ்


“எங்கயோ ஒரு பயம் இருக்கு பிக் பாஸ்” - இது தன்னுடைய வீடியோவைப் பார்த்ததும் முத்து சொன்ன வாக்கியம். “நூறு நாள்தான். ஆனா வாழ்க்கையின் பெரும்பகுதியை இங்க கழிச்ச மாதிரியே ஒரு ஃபீலீங். நடிகனாகும் ஆசை எனக்கு இருக்கு. நடிப்பின் மூலமாக நம் உணர்வுகளை மறைமுகமாக வெளிப்படுத்த முடியும். ஆனா உண்மையான உணர்வுகளை படம் பிடித்த பிக் பாஸிற்கு நன்றி. இதை விடவும் என்ன பெரிசா கிடைச்சிடப் போவுது? என்னையெல்லாம் மக்களுக்குப் பிடிக்குமான்னு தோணும். ஆனா என்னையும் இத்தனை மக்கள் நேசிக்கறாங்கன்றது கனவு மாதிரி இருக்கு” என்று நெகிழ்ந்த முத்துவிடம் “உங்கள் பயணத்தைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், அது - உழைப்பு” என்று பாராட்டினார் பிக் பாஸ். 

“சொன்னா திட்டக்கூடாது. அடிக்க வரக்கூடாது” என்று பில்டப் தந்த முத்து “உங்க ஓட்டை எனக்குப் போடுவீங்களா?” என்று கேட்டு காமெடி செய்ய “ஓட்டைய வேணுமின்னா போடுறேன்” என்று அவரை வழியனுப்பி வைத்தார் பிக் பாஸ்.

தன்னிடம் அட்வான்டேஜ் எடுத்துக் கொண்ட ராணவ்விடம் வலிக்காமல் ஆட்சேபம் செய்து கொண்டிருந்தார் பவித்ரா. “பர்மிஷன் வாங்கிட்டுத்தானே செஞ்சேன்?” என்று ராணவ் மல்லுக்கட்ட “அது போன வருஷமே எக்ஸ்பயரி ஆயிடுச்சு” என்று பக்கத்திலிருந்த மஞ்சரி கிண்டல் செய்தார். “நீங்க கைத்தட்டல் வாங்கறதுக்காக என்னை டவுன் பண்றீங்க?” என்று பவித்ரா புகார் சொன்னார். இந்த விஷயம் விளையாட்டாக மட்டுமே கடந்து போகக்கூடியதல்ல. ராணவ்வால் பவித்ராவிற்கு உண்மையிலேயே இடையூறு ஏற்படுகிறது என்றால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதே. 

முயல் ஆமை கதையாக பவித்ரா ஜெயிப்பாரோ?!

ராணவ்வுடன் சண்டை போட்டு முடித்த கையோடு பவித்ராவிற்கான அழைப்பு வந்தது. ஆக்டிவிட்டி ஏரியாவிற்குள் பயத்துடன் நுழைந்தார். (ஒருவேளை அப்படியே வீட்டுக்கு அனுப்பிடுச்சிடுவாங்களோ?’) வீடியோ பார்த்து முடிந்ததும் மற்றவர்களைப் போலவே கண்ணீர் விட்ட பவித்ரா “நான் உண்மையா வாழ்ந்திருக்கேன்” என்று நெகிழ்ந்தார். “பவித்ராவிற்கு இது வராது.. அது வராதுன்னு சொன்னாங்க. ஆனா உங்க கிட்ட இருக்கறது. முயற்சி. விடாமுயற்சி’ என்று ‘தல’ படத்தின் டைட்டிலை சொல்லி வாழ்த்தி அனுப்பினார் பிக் பாஸ். 

கடைசி வீடியோ. இது ரயானுக்கானது. ‘தி இஸ் ஃபார் யூ ஜாக்’ என்று ஜாக்குலினை நினைவுகூர்ந்தவர் இவர் மட்டுமே. கோவா கேங்கின் உண்மையான உறுப்பினர். வீடியோ பார்த்து நெகிழ்ந்த ரயான் “இந்த இடத்திற்கு சும்மா வரலை. என்னோட தப்பை சரியாக்கிக்கிட்டு வந்திருக்கேன். என்னோட பாதை கடுமையா இருந்தது” என்றவரிடம் “ஒரு மனிதன் தன்னை நம்பணும். எண்ணங்கள் தெளிவா இருக்கணும். இதற்கு உதாரணம் நீங்க. உங்க பயணத்தை ஒரே வார்த்தையில் சொல்லணும்னா - அது தன்னம்பிக்கை” என்று பாராட்டினார் பிக் பாஸ். 

“நான் யாருன்னே தெரியாம உள்ளே வந்தேன். நம்மைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டா இலக்கை அடைய முடியும். என்னை மாதிரி பல பேருக்கு நான் முன்னுதாரணமா இருப்பேன்” என்ற ரயான், இறுதியில் ஜாக்குலினையும் மறக்காமல் நினைவு கூர்ந்தார்.

ஏறத்தாழ அனைத்தும் நடந்து முடிந்து விட்ட தருணத்தில் வாசகர்களாகிய உங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றுதான் இருக்கிறது. 

சீசன் 8- டைட்டில் பெறுவதற்கு ஒட்டுமொத்த தகுதியும் உள்ள போட்டியாளர் யார்? கமெண்டில் வந்து சொல்லுங்க மக்களே!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.