திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி `சமத்துவ பொங்கல் விழா’ கொண்டாடப்பட்டது.
இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, அஜித்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி உள்பட மேலும் சில காவலர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்கு கந்திலி பகுதியைச் சேர்ந்த `ரவுடி’ ஒருவரையும் சிறப்பு விருந்தினராக கந்திலி போலீஸார் அழைத்ததாகக் கூறப்படுகிறது. கொலை வழக்கு ஒன்றில் கைதாகி, இப்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார் அந்த ரவுடி.
இதே காவல் நிலையத்தில்தான் அந்த ரவுடி குறித்த `ஹெச்.எஸ்’ எனப்படும் `வரலாற்றுத் தாள்’ பதிவு செய்யப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கந்திலி காவல் நிலையம்அப்பேர்ப்பட்ட ரவுடியை பொங்கல் விழாவிற்கு அழைத்ததோடு மட்டுமல்லாமல், ஊர்மக்கள் முன்னிலையில் போலீஸாரே மாலை அணிவித்து மரியாதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஷ்ரேயா குப்தாவிற்கு புகார் சென்றது. இதையடுத்து, துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கந்திலி எஸ்.ஐ-க்கள் கார்த்தி, அஜித்குமார், சிறப்பு எஸ்.ஐ உமாபதி ஆகிய 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி நடவடிக்கை எடுத்திருக்கிறார் எஸ்.பி ஷ்ரேயா குப்தா. ரவுடியுடன் நட்பு பாராட்டிய போலீஸாரின் செயல் உள்ளூர் மக்களிடையே ஒருவித அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது.