'நானே நேர்ல வரேன்' அப்பாயின்ட்மென்ட் கேட்ட போராட்டக்குழுவுக்கு விஜய் பதில் - பரந்தூர் விசிட் பின்னணி
Vikatan January 18, 2025 08:48 PM
வருகிற 20 ஆம் தேதி பரந்தூருக்கு நேரில் செல்லவிருக்கிறார் தவெக கட்சியின் தலைவர் விஜய். புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் மத்தியில் உரையாற்றவும் இருக்கிறார். இதுவரை போராட்டக் களங்களுக்கு வராமல் இருந்த விஜய் முதல் முறையாக பரந்தூருக்கு விசிட் அடிக்க இருப்பதன் பின்னணி என்ன என்பதை விசாரித்தோம்.
TVK VIJAY பரந்தூரில் விமான நிலையம்

தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விஜய் நடத்தி முடித்திருந்தார். சில நடைமுறை சிக்கல்களால் மாநாட்டில் வாசிக்கப்படாமல் விட்ட தீர்மானங்களை, ஒரு வாரம் கழித்து தனியே செயற்குழுவை கூட்டி விஜய் நிறைவேற்றியிருந்தார். மத்திய மாநில அரசுகளை பல இடங்களில் சாடியிருந்த அந்தத் தீர்மானங்களில் பரந்தூர் விமானநிலையத்தைப் பற்றியும் ஒரு தீர்மானம் இடம்பெற்றிருந்தது. 26 தீர்மானங்களை உள்ளடக்கிய அந்தப் பட்டியலில் எட்டாவதாக இருந்த தீர்மானம், 'விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மன நிலையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை ஓரு கொள்கையாகவே முன்னெடுப்போம்.

என்.எல்.சி.,யில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்தக்கூடாது.' இது. பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியது அதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் போராட்டக் குழுவின் கவனத்தை ஈர்த்தது.

இதனால் விஜய்யை நேரில் சந்தித்து அதற்காக நன்றி கூறி மேலும் தங்களின் கோரிக்கைகளையும் அவரிடம் முன்வைக்க வேண்டி விஜய் தரப்பிடம் போராட்டக்குழு சார்பில் அப்பாயின்ட்மென்ட் கேட்கப்பட்டிருக்கிறது. முதல் தடவை அப்பாயின்ட்மென்ட் கேட்கப்பட்ட போது விஜய் சூட்டிங் சம்பந்தமான வேலைகளில் பிஸியாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சில வாரங்கள் பொறுத்து போராட்டக்குழு தரப்பில் மீண்டும் விஜய்யிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார்கள். அப்போதுதான் அண்ணா யூனிவர்சிட்டி விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருந்தது. விஜய்யும் அது சம்பந்தமாக ஆளுநரை சந்திக்கும் வேலையில் மும்முரமாக இருந்திருக்கிறார். இதனால் அந்த சமயத்திலும் பரந்தூர் போராட்டக் குழுவினரால் விஜய்யை சந்திக்க முடியவில்லை.

பரந்தூர் மக்கள் போராட்டம்

'விஜய்யின் பதில்'

இதன்பின்னர்தான், 'இனியும் நீங்க அப்பாயின்ட்மென்ட் கேட்க வேணாம்...நானே உங்களை சந்திக்க நேர்ல வரேன்..' என விஜய் தனது தரப்பிலிருந்து போராட்டக்குழுவுக்கு செய்தி அனுப்பியிருக்கிறார். ஜனவரி முதல் வாரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இதனையொட்டிதான் 19 அல்லது 20 தேதிகளில் பரந்தூருக்கு நேரில் செல்லலாம் என விஜய் முடிவெடுத்திருக்கிறார். கட்சியின் பொருளாளரான வெங்கட்ராமனும் இதன்பிறகுதான் காவல்துறையிடம் அனுமதி வாங்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். இதற்கிடையில் தவெக தரப்பில் முக்கியமான நிர்வாகிகள் சிலர் பரந்தூர் போராட்டக்குழுவை நேரில் சந்தித்து அவர்களின் விவசாய நிலங்கள் சம்பந்தமான முழுத் தகவல்களையும் வாங்கிச் சென்று விஜய்யிடம் ரிப்போர்ட்டாக ஒப்படைத்திருக்கின்றனர்.

'தவெகவின் ப்ளான்'

19 ஆம் தேதிக்கே அனுமதி கிடைத்துவிடும் என தவெக தரப்பில் எதிர்பார்த்திருந்தனர். அதனால்தான் ஆனந்தே நேற்று நேரில் சென்று விஜய் மக்களை சந்திக்கவிருக்கும் இடத்தை ஆய்வு செய்து வந்தார். ஆனால், காவல்துறை தரப்பில் சில கட்டுப்பாடுகளுடன் 20 ஆம் தேதியே விஜய் பரந்தூருக்கு செல்ல அனுமதி அளித்திருக்கின்றனர்.

பரந்தூரில் தவெகவின் ப்ளான் என்ன என்பதை அறிய முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினேன். 'தலைவர் வந்து மக்களை சந்திக்க இரண்டு மூன்று இடங்களை ஆப்சனில் வைத்திருக்கிறோம். பரந்தூர் மக்களின் சார்பில் ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் விஜய் எங்களை சந்திக்கலாம் என ஐடியா சொல்லியிருக்கின்றனர். அதனால்தான் அந்தத் திடலை சுத்தம் செய்யும் பணிகளையும் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். ஆனால், வெளியிடத்தில் வைத்தால் தலைவரை பார்ப்பதற்காகவே வெளியூர் ஆட்களும் வருவார்கள். இதனால் போராடும் மக்களின் கோரிக்கைகளை கேட்டு அவர்களுக்கு ஆதரவாக பேசுவதில் சிக்கல் இருக்குமோ எனும் ஐயமும் இருக்கிறது.

விஜய் - TVK Vijay

இதனால் அருகிலேயே எதாவது கல்யாண மண்டபம் இருக்குமா என்றும் பார்த்து வருகிறோம். அது செட் ஆகவில்லையெனில் அம்பேத்கர் திடலிலேயே ஒரு வேனின் மீது ஏறி தலைவர் போராடும் பரந்தூர் மக்களுக்கு ஆதரவாகப் பேசும் திட்டமும் இருக்கிறது. பரந்தூர் மக்களுக்கு சட்டரீதியான உதவிகளை செய்ய ஆதரவாக நிற்பேன் எனக்கூறி நம்பிக்கை வார்த்தைகளை தலைவர் பேசவிருக்கிறார்.' எனக்கூறி முடித்தனர்.

முதல் முறையாக மக்களின் பிரச்னைக்காக விஜய் போராட்டக் களத்துக்கே வருகிறார். பரந்தூரில் விஜய்யின் செயல்பாடுகள் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.