தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சியை சேர்ந்த 16வயது சிறுமி கீழத்தோட்டம் கிராமத்தில் இருக்கும் தனது தோழியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் அரவிந்த் (20) என்ற நபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நாளடைவில் இருவரும் தொலைபேசி வாயிலாக அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளனர்.
இதனிடையே தனிமையில் சந்திக்க சிறுமியை அரவிந்த் அழைத்துள்ளார். அவனை நம்பி அரவிந்தை சந்திப்பதற்காக ராஜாமடம் சவுக்கு காட்டு பகுதிக்கு சிறுமி தனியாக சென்றிருக்கிறார். அங்கு வைத்து அத்துமீறியதுடன் சிறுமியை அரவிந்த் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் உடன்வந்த அரவிந்தின் நண்பனும் கீழத்தோட்டம் பகுதியை சார்ந்த சக்திவேலின் மகனுமான சரண் (20) என்பவரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதனால் அந்த சிறுமி கதறி அழுத நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். உடனே பொதுமக்கள் வருவதைக் கண்ட இரு இளைஞர்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணிகா தலைமையிலான காவல்துறையினர் தப்பியோடிய அரவிந்த் மற்றும் சரண் ஆகியோரை பிடித்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 16வயது சிறுமி சவுக்கு காட்டிற்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.