சென்னையில் நடிகர் எஸ்வி சேகரின் நாடக பிரியா குழுவின் 50-வது ஆண்டு விழா நடைபெற்ற நிலையில் அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது சென்னை மந்தைவெளியில் உள்ள 5-வது டிரஸ்ட் கிராஸ் தெருவுக்கு நடிகர் எஸ்வி சேகரின் தந்தை எஸ்வி வெங்கட்ராமன் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி கொடுத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான் இருக்கும் கட்சியில் இருப்பவர்களை துணிச்சலுடன் விமர்சிக்கும் ஆற்றல் கொண்டவர் எஸ்வி சேகர்.
இதைப் பார்க்கும்போது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் இவரை பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது என்று தெரிகிறது என்றார். மேலும் முன்னதாக பாஜக கட்சியில் இருந்த எஸ்வி சேகர் தொடர்ந்து அண்ணாமலையை விமர்சனம் செய்து வந்த நிலையில் பின்னர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். சமீபத்தில் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்ட போது அதனை விமர்சித்தார். இதன் காரணமாக தனக்கு பாஜகவில் இருந்து மிரட்டல்கள் கூட வருவதாக எஸ்வி சேகர் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் தான் இருக்கும் கட்சியில் இருப்பவர்களையே எதிர்க்கும் துணிச்சல் கொண்டவர் எஸ்வி சேகர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.