பருவம் தவறிய மழை; மீண்டும் முளைத்த நெற்பயிர்கள்; நிவாரணம் கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு
Vikatan January 27, 2025 09:48 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாகக் குளங்கள், கண்மாய்களில் வழக்கத்தை விட நீர் இருப்பு அதிகமாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு விவசாயிகள் பல லட்சம் ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தனர். விவசாயிகளின் எதிர்பார்ப்பை விடக் கூடுதலாக நெல் நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது.

அழுகிய நெற்பயிருடன் விவசாயிகள்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் 2 நாட்கள் பருவம் தவறிப் பெய்த கடும் மழையினால் வயல்களில் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்தன. வயல் பரப்பில் தேங்கிய மழைநீர் வடிய வாய்ப்பு இல்லாத நிலையில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் மீண்டும் முளைக்கத் துவங்கியதுடன், பெரும்பாலான நெற்பயிர்கள் அழுகிப் போயின. இதனால் மாவட்டம் முழுமைக்கும் 1.92 லட்சம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள்

ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்து நெற் பயிரிட்ட நிலையில், தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தில் ரேண்டம் முறையில் கணக்கிட்டால் விவசாயிகளுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்படும் சூழலில், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதியிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரியிருந்தனர்.

வீணான நெற்பயிருடன் ஒப்பாரி வைத்த பெண்கள்

இந்த கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், அதன் நிறுவனத் தலைவர் பாக்கியநாதன் தலைமையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் மீண்டும் முளைக்கத் துவங்கிய நெற்பயிர்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். பாதிக்கப்பட்ட பெண்கள் முக்காடிட்டு நெற்பயிர்களுடன் ஒப்பாரி வைத்து அழுதனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி மனு அளித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.