38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று தொடங்கி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.
டேராடூனில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற்ற கோலாகல தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், ஷிவ்புரி, நியூதெக்ரி ஆகிய 07 நகரங்களில் 18 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 38 அணிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இதில் தடகளம், நீச்சல், துப்பாக்கிச்சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல்,கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கபடி, கோ-கோ உள்பட 32 வகையான போட்டிகள் இடம் பெறுகிறது.
இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு மோடி கூறியதாவது;
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அது இந்திய விளையாட்டுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். ஒலிம்பிக் என்பது வெறும் விளையாட்டுப் போட்டி மட்டுமல்ல.
ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடந்தாலும் எல்லாத் துறைகளும் ஆதாயம் அடைகின்றன. இது விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வசதிகளை உருவாக்குகிறது. இது கட்டுமானத்தை ஊக்குவிக்கிறது, புதிய இணைப்பு, போக்குவரத்து வசதிகளை உருவாக்குகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக சுற்றுலாவை மேம்படுத்துகிறது. விளையாட்டு வீரர்கள் உள்பட உலகெங்கிலும் உள்ளவர்கள் இந்தியாவுக்கு வருவார்கள். 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு என உலகம் இன்று சொல்லிக்கொண்டிருக்கிறது.
பாபா கேதாரை வணங்கிவிட்டு, இது உத்தரகாண்டின் தசாப்தம் என்று என் வாயிலிருந்து வந்தது. உத்தரகாண்ட் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நேற்று உத்தரகாண்ட் மாநிலம் சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்காக உத்தரகாண்ட் அரசை நான் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.
அத்துடன், கடந்த தேசிய விளையாட்டு போட்டி 2023-ஆம் ஆண்டு கோவாவில் 05 நகரங்களில் நடந்தது. இதில் மகாராஷ்டிரா 82 தங்கம் உள்பட 230 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.