ஜெய் பீம் படத்தில் நடித்தது மூலமாக பிரபலமான லிஜோமோள் ஜோஸ் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன். இந்தப் படத்தில் லாஸ்லியா, ஹரிகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில் இந்த படம் பற்றி இயக்குனர் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது “ஜென்டில் என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தான். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அனைத்துமே உடல் சார்ந்ததாகவே உள்ளது. அதற்குக் காரணம் பெண்ணின் உடலை ஒரு பண்டமாகவும் பொருளாகவும் பார்ப்பதுதான்.
இது தொடர்பான விவாதம் ஜென்டில்வுமன் படத்தில் இருக்கும். அதோடு பெண்கள் பற்றிய பொதுவாக கூறப்படும் கற்பிதங்களை கேள்வி கேட்கும் விதமாகவும் இருக்கும். இரண்டு பெண்களின் கதையை மையமாக வைத்துதான் படம் இருக்கப் போகிறது. இந்த படத்தில் ஹரி கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இது பெண்களைப் பற்றி பேசும் படம் தானே தவிர பெண்ணிய படம் கிடையாது. சமூகத்தில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த படத்தை இயக்கியுள்ளேன். படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் மார்ச் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.