சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களைத் துரத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இளைஞர்களின் காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது.
அந்த வீடியோவில் 2க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒரு காரில் ஈ.சி.ஆர். சாலையில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த காரை திமுக கட்சிக்கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் வந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் துரத்திச் சென்று இடைமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். திடீரென அந்த காரில் இருந்த இளைஞர்களில் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.
இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த பெண்கள் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக மாற்று பாதையில் சென்றனர். ஆனாலும், அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து சென்ற அந்த கும்பல் மீண்டும் அவர்களது காரை இடைமறித்தது. பெண்கள் தங்கள் உறவினர் வீடு அருகே வரும் வரை அந்த இளைஞர்கள் காரில் துரத்தி வந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களை காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் காரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர்களை கானத்தூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், சிசிடிவியில் காணப்பட்ட இரு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.