இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள் என்ன? எல்லாமே கிடைக்குமா?
Newstm Tamil January 31, 2025 12:48 PM

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் வருமான வரி உள்ளிட்ட விஷயங்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதேபோலவே இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. குறிப்பாக, கட்டுமானம், சுகாதாரம், கல்வி ஆகிய பிரிவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படலாம். சுற்றுலா, போக்குவரத்து போன்ற துறைகளின் மேம்பாட்டுக்காக தொழில்நுப்ட அம்சங்களை அதிகமான அளவில் பயன்படுத்தவும் அதற்கு அதிக நிதி ஒதுக்கவும் வாய்ப்பு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் நிதியுதவி உயர்வு அல்லது பெண்களுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

வழக்கம்போலவே இந்த முறையும் பட்ஜெட் மீது அரசு ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி நிலுவைத் தொகை, சம்பள கணக்கீட்டில் மாற்றம் போன்ற அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றனர்.

பொதுவாகவே, இளைஞர்கள், பெண்கள், முதியோர் நலன், விவசாயிகள் மேம்பாடு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது, புதிய திட்டங்களை அறிவிப்பது, அதிக நிதி ஒதுக்கீடு செலுத்துவது போன்றவற்றில் மோடி அரசு தீவிரமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் போன்ற திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.