இந்தியாவில் பால் என்பது வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, அது ஒரு விவசாயிகளின் வாழ்வாதாரம்கூட, அது மட்டுமல்ல அது ஒரு பொருளாதார சக்தி. 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் பால் உற்பத்தியில் இந்தியா உலகிலேயே முதலிடம் வகிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பால் உற்பத்தி ஆண்டுதோறும் 6% அதிகரித்துள்ளது. 2022-23ல் 230.58 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது உலக பால் உற்பத்தியில் 25% ஆகும். இந்தியாவின் இந்த சாதனை உலக சராசரியை விட மிக அதிகம்.
இந்தியாவில் ஒருவருக்கு நாளொன்றுக்கு 459 கிராம் பால் கிடைக்கிறது. இது உலக சராசரியான 322 கிராமை விட அதிகம். இந்தியாவின் பால் உற்பத்தியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 35% பெண்கள் பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 48,000 பெண்கள் பால் கூட்டுறவு சங்கங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன.
பால் கறவை இயந்திரம் மூலமாக பால் கறக்கும் பணிஇந்தியாவின் பால் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ராஷ்ட்ரிய கோகுல் மிஷன், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டம், தேசிய கால்நடை இயக்கம், கால்நடை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, கிசான் கிரெடிட் கார்டுகள் போன்ற திட்டங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் உதவுகின்றன.
இந்தியாவின் பால்வளம் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்குவது மட்டுமல்லாமல், வளர்ச்சிக்கு கலங்கரை விளக்கமாகவும் உள்ளது.
`உழவர்பூமி’ நிறுவனம்தமிழ்நாட்டிலும் பால் சார்ந்த தொழிலில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தாலும் இன்று நாம் பார்க்க விருப்பது உழவர் பூமி என்ற நிறுவனத்தினை தான். வெற்றிவேல் பழனி தனது சகோதரர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து இதனை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.
`உழவர்பூமி’ நிறுவனம் வளர்ந்த கதையைத்தான் இன்று பார்க்க இருக்கிறோம். பாலுக்கும், விவசாயத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஒருவர் ஐடி நிறுவனத்திலிருந்து விலகி ஒரு பால் விநியோகம் செய்யும் நிறுவனத்தை ஆரம்பித்து இன்று ஒரு நாளைக்கு 10,000 லிட்டர் விநியோகம் செய்கிறார் என்றால் ஆச்சர்யம்தானே... வாருங்கள், அவரிடம் பேசுவோம்..!
வெற்றிவேல் பழனி , பன்னீர்செல்வம்``உழவர் பூமி நிறுவனத்தைத் துவங்க உங்களைத் தூண்டிய பின்னணி பற்றி சொல்லுங்களேன், குறிப்பாக ஐடி துறையில் இருந்துவிட்டு பால் விற்கலாம் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?”
``ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு பங்கேற்பாளராக கலந்து கொண்ட போது, எனக்கு விவசாயிகள் இன்றைய காலகட்டத்தில் எதிர்கொள்ளும் சவால்களை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. விவசாயம் பற்றி தெரிந்திருந்தாலும் அதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதை தேடி தேடி படித்தபோது தமிழகத்தில் மூன்று பிரச்னைகள் இருப்பது தெரிய வந்தது.
1.விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் தேவை, அதில் பால் ஒரு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
2.இன்றைய நகர வாழ்க்கையில் குழந்தைகளுக்கு சுத்தமான பால் கிடைப்பது என்பது அரிதாகி விட்டது
3. பால்கள் அடைக்கப்பட்டுவரும் பிளாஸ்டிக்கள் புவிக்கு ஆபத்து என்பதை கண்டறிந்தோம். அதற்கு மாற்றை கண்டறியவேண்டும். இந்த மூன்று சவால்களையும் சரி செய்ய `உழவர்பூமி’ என்ற நிறுவனத்தை தொடங்குவதாக முடிவு செய்தோம்.
‛‛உங்கள் பக்கத்து வீட்டு பால்காரன் ’’ என்று எங்கள் நிறுவனத்திற்கு ஒரு லட்சிய வாசகம் ஒன்றை உருவாக்கிக்கொண்டோம். ஏனெனில் கிராமங்களில் மற்றும் அருகில் உள்ள நகரங்களில் வாழ்ந்த நமக்கு, நமது அருகில் மாடு வைத்திருந்த பால்காரர் கறந்து ஒரு சில மணி நேரங்களே ஆன எந்த பிராசசும் செய்யப்படாத புதிய பாலை பருகி இருப்போம், அதில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் முழுமையாக நமக்கு கிடைக்கும், அதனுடைய சுவையும் மிக நன்றாக இருக்கும், அதை இன்று நகர வாழ்க்கையில் அதே போன்று பால்காரர்கள் பால் வாங்கும் அனுபவத்தை உழவர்பூமி கொடுக்கிறது. அதை திறம்பட செய்துவருகின்றோம்.”
``ஆரம்ப நிலையில் உங்கள் திட்டங்களுக்கு முதலீடு எப்படி திரட்டினீர்கள் , அதன் சவால்கள் அதன் பின்னணி அதை எப்படி சமாளித்தீர்கள்?”
``ஆரம்ப காலங்களில் சில நண்பர்களுடன் மற்றும் என் சகோதரர் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து சில லட்சம் முதலீட்டில் தொடங்கினோம், பின்னர் என்னிடமிருந்த ஒரு எர்டிகா காரை குறைந்தவிலைக்கு நண்பரிடம் கொடுத்து அதிலிருந்து வந்த பணத்தையும் முதலீடு செய்தேன். முடிந்த வரை எது தேவையோ அதை மட்டும் வாங்கி அதற்கான செலவுகளை மட்டும் செய்து சிறிய அளவில் தொடங்கினோம். துவங்கவேண்டும் என்று முடிவு செய்தபின் அதிலிருந்து பின்வாங்கக்கூடாது என்பதால் தொழிலை துவங்குவதற்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அனைத்தையும் செய்தோம்.”
``பால் போன்ற பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கும்போது இதை எப்படி சமாளித்தீர்கள்?”
``பால் தொழில் எல்லா வகையிலும் மிகவும் சிரமமானது, அதிலும் எங்களது இலக்கு `பக்கத்து வீட்டு பால்காரன்' என்பதால் எங்கள் பசும்பாலை எந்த ஒரு ப்ராசஸ் செய்யாமல் பாலை குளிரூட்டி அதன் இயல்பு மாறாமல் விநியோகம் செய்வது என்பது மிக கடினமான செயல்.
ஆரம்ப காலங்களில் நாங்கள் நிறைய சிக்கல்களை சந்தித்தோம், தொழில்நுட்பத்தின் உதவியால் நாங்கள் மொபைல் ஆப் மூலம் subscription மாடல் வழியே பால் எப்போது வேண்டும் என அனைத்தையும் மொபைல் ஆப் மூலம் மேலாண்மை செய்தோம். இதனால் தேவைக்கு ஏற்றார்போல் சிறிது சிறிதாக விவசாயிகளை எங்கள் விநியோகப் பிணைப்பில் சேர்த்துக்கொண்டோம். அதிகமான நிறுவனங்கள் பசும் பாலை டெலிவரி செய்யும் முயற்சி செய்து முடியாமல் மீண்டும் ப்ராசஸ் செய்யப்பட்ட பாலையே சந்தைப்படுத்த தயாராகிவிட்டனர். எங்களுக்கும் அப்படி ஒரு சூழல் வந்தது, ஆனால் நாங்கள் அதை சவாலாக எடுத்துக் கொண்டு மக்களிடையே பசும்பாலை எப்படி பயன்படுத்த வேண்டும் என ஒரு நல்ல விழிப்புணர்வை உருவாக்கி அதன் மூலம் எங்களால் இன்று சென்னையில் மட்டும் ஒரு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் வீடுகளுக்கு மேல் பசும்பாலை விநியோகம் செய்ய முடிகிறது.
இன்னொன்று எங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளை சரியாக பார்த்துக்கொள்ளவேண்டும் எனபதும் எங்கள இலக்கு. அதனால் எங்கள் உழவர் பூமி பிணைப்பில் உள்ள பால் வழங்கும் மாடுகளுக்கு நாங்கள் நபார்டின்
ETHNOVETERINARY (மூலிகை மருத்துவம்) என்ற வழிமுறையை பயன்படுத்தி மூலிகைக்களைக்கொண்டு அடிப்படை நோயை குணப்படுத்தும் உத்தியை கையாள்கிறோம். இதனாலும் செலவினங்களை கட்டுக்குள் வைத்து விவசாயிகளுக்கு லாபம் ஏற்பட வழிவகை செய்கிறோம்.
கொரோனாவில் போது என்னவெல்லாம் செய்தீர்கள்? அப்போது பால் விநியோகத்தில் சந்தித்த சிக்கல்கள் என்ன?
கொரோனா தாக்கத்தின் போது அனைத்து தொழில்களும் சிரமப்பட்டு கொண்டிருந்தபோது. நாங்கள் அந்த நேரங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தோம். D2C ஸ்டார்ட் அப் அதுவும் அத்தியாவசியம் என்பதால் எங்களுக்கு அந்த நேரங்களில் பெரிய அளவில் தேவையும் வரவேற்பும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் எங்களால் நிறைய புதிய தேவைகளை டெலிவரி செய்ய சிரமப்படும் சூழ்நிலையில் தள்ளப்பட்டோம். அந்த நேரங்களில் அரசு மற்றும் சுகாதார துறையின் முறையான வழிககாட்டுதல்படி அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி நாங்கள் முழுவீச்சில் விநியோகம் செய்து கொண்டிருந்தோம்.
அந்த காலகட்டத்தில் உலகின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கிடைப்பது கொஞ்சம் சிக்கலாக இருந்தது. அவர்களுக்காகவே நாங்கள் நிறைய மெனக்கெட்டு பாலை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டுவு போய சேர்த்தோம். பொதுவாக விநியோகம்தான் மிக சிரமமான ஒன்று. ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் நாங்கள் அந்த சவாலை தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்வுகளை உடனுக்குடன் செயல்படுத்தி சமாளித்தோம்.
`தமிழ்நாட்டில் ஒரு பால் நிறுவனத்தை நடத்துவதில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் யாவை?’
``பால் நிறுவனங்களுக்கு இருக்கும் சவால் என்பதை விட எங்களைப் போன்ற பால் மட்டும் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி மிக பெரிய சவாலாக உள்ளது. நாங்கள் ஜிஎஸ்டி வரி இல்லாத பாலை விற்கின்றோம். ஆனால் அதற்காக நாங்கள் வாங்கும் அனைைத்துப் பொருட்களில் நாங்கள் ஜிஎஸ்டி வரியை செலுத்திக் கொண்டிருக்கிறோம் , ஆனால் எங்களுக்கு இன்புட் கிரெடிட் இல்லை. இந்த பார்வையில் எங்களுக்கு மிக கடினமாக உள்ளது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எங்களுடைய லாபமே மிக மிக சிறிய லாபம். ஆனால் அந்த லாபமும் வந்து ஜிஎஸ்டி வரி இன்புட்டில் இருக்கிறது. அதனால் அதை எங்களால் முழுதாக பயன்படுத்த முடிவதில்லை. இது குறித்து நிறை நாம் விவாதிக்கவேண்டும். பேசவேண்டும். ஏனெனில் நிறுவனத்தை நடத்த லாபம் அவசியம். இது குறித்து நாம் பலரிடம் பேசினாலும் நமக்கு கிடைக்கும் பதில் நீங்கள் இன்புட் கிரெடிட் எடுக்கும் வகையில் பொருட்களை உருவாக்கி விற்பனை செய்யுங்கள் என்பதுதான். ஆனால் வரிக்காக நமது இலக்கை மாற்றினால் அது எங்களது இலக்கிலிருந்து வெளியேற்றிவிடும். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கின்றோம்”
உங்கள் நிறுவனத்தின் கலாச்சாரத்தை (Company Culture) எப்படி வடிவமைத்து உள்ளீர்கள்?
``ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கலாச்சாரம் மிக முக்கியம். முன்பே சொன்னதுபோல எங்களது இலக்கு மூன்று... மாடு, பால், இயற்கை சமநிலை. இதற்கு ஏற்றார்ப்போல் எங்களது நிறுவனத்தின் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளோம்.
இன்றைய நிலையில் மாடு வளர்ப்பது என்பது விவசாயிகளுக்கு பெரிய லாபமீட்டும் வகையில் இல்லை. எங்களிடம் உள்ள விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுத்து பால் வாங்குகின்றோம். அதோடு நபார்டு வழிகாட்டுதல் அடிப்படையில் எங்கள் கால்நடை மருத்துவரைக்கொண்டு தினமும் எங்கள் பிணைப்பில் உள்ள விவசாயிகளின் வீடுகளுக்குச்சென்று அவர்களின் கால்நடைகளுக்குத் தேவையான ஆலோசனைகளை செய்துவருகின்றோம். இதனால் அவர்களுக்கு கணிசமாக மருத்துவச்செலவு குறைகிறது. இதனால் விவசாயி லாபம் அடைகிறார்.
அந்த பாலை உடனுக்குடன் விநியோகம் செய்யும்போது அவர்களுக்கு சத்தான பால் அப்படியே கிடைக்கிறது. அதனால் வாடிக்கையாளருக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.
மூன்றாவதுதான் மிக முக்கியமானது நாங்கள் பேக்கெட்டில் பால் கொடுப்பதில்லை. பாட்டிகளில்தான் பால் விற்பனை செய்கின்றோம். அதை திரும்ப வாங்கி அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவற்றை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுதுகின்றோம், ஒரு நாளைக்கு 12,000 லிட்டர் பால் எனும்போது ஒரு வருடத்திற்கு 12-13 டன் பிளாஸ்டிக் பயன்பாட்டை நீங்கள் கட்டுப்படுத்தியிருக்கின்றோம். இதனால் புவிக்கு ஆரோக்கியம்.
விவசாயி, வாடிக்கையாளர், புவி இவர்கள் அனைவருக்கும் நாங்கள் ஆரோக்கியத்தை கொடுக்கிறோம்”
புதியதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உதவும் என்பதற்க்காக இந்த கேள்வி, உங்கள் நிதி திரட்டிய அனுபவம் எப்படி ? இதுவரை யாரெல்லாம் முதலீடு செய்துள்ளார்கள். அரசு தரப்பில் ஏதேனும் திட்டங்களை பெற்றுள்ளீர்களா?
``முதலீட்டைப் பொறுத்தவரை முதல் முறை நாங்கள் Nativelead Foundation என்கின்ற ஒரு ஏஞ்சல் ஃபண்ட் நிறுவனத்திடம் முதல் முதலீடாக 1.2 கோடியை பெற்றோம். அவர்களின் முதலீடு எங்களை எங்களை நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மிக மிக உறுதுணையாக இருந்தது. அவர்களிடம் முதலீடு மட்டுமில்லாமல் அவர்களிடம் பல துறை சார்ந்த அனுபவ வல்லுநர்களிடமிருந்து நல்ல ஒரு பயிற்சியும் ஆலோசனையும் எங்களுக்கு தொடர்ச்சியாக கிடைத்தது. கடந்த ஆண்டு நாங்கள் Anicut கேப்பிட்டல் என்ற ஒரு வீசி ஃபண்ட் நிறுவனத்தில் இருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் 8.5 கோடி) நிதியை பெற்றோம். இதுவரை அரசாங்கத்திடமிருந்து DIC மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக கேப்பிட்டல் சப்சிட்ரி பெற்றுள்ளோம். இவற்றையெல்லாம் கொண்டு நாங்கள் 24,000 வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கிக்கொண்டிருக்கிறோம். மேலும் விரிவாக்கம் செய்யவும் எங்களை தயார் செய்து கொள்கின்றோம்.”
நேட்டிவ்லீடு Nativelead Foundation
நேட்டிவ்லீடு எனும் முதலீட்டு நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள 2,3,4ம் நிலை நகரங்களில் உள்ள தொழில்முனைவோர்களுக்கு முதலீடு செய்துவருகிறது. பெறும் நிறுவனங்கள் பெருநிலை நகரங்களை மட்டுமே இலக்காக வைத்து முதலீடு செய்யும்போது தமிழ்நாட்டில் 2,3,4ம் நிலை நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு நிதி, வழிகாட்டுதல், நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. நேட்டிவ்லீட், தமிழ்நாட்டில் புதுத்தொழில் ஊக்குவிப்பதில் தனி கவனமும் செலுத்திவருகிறது.
தமிழ்நாட்டில் பெரிய நகரங்களில் மட்டும்தான் புது தொழில் ஆரம்பிக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை. நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொழில் துவங்கலாம், அதற்கு முதலீடு அளிக்க நிறைய நிறுவனங்கள் இன்று தயராக உள்ளன. உங்கள் தயாரிப்பு/சேவையை என்ன விதமான சேவையை மக்களுக்கு கொடுக்கப்போகிறது என்பதில் கவனம் வைத்தால் போதுமானது. முதலீடுக்கு நேட்டிவ்லீடு போன்ற நிறுவனங்கள் இன்று பக்கபலமாக இருக்கின்றன.
(ஸ்டார்ட்அப்-கள் வரும்..!)