`திருப்பரங்குன்றம் கோயில் வழிபாடு பிரச்னையில், தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும்!' - ஆர்.பி.உதயகுமார்
Vikatan February 01, 2025 12:48 AM

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து மதுரை கலெக்டரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் .உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "மக்களின் கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுத்து வருகிறோம். ஆனால், ஒரு மனுவின் கோரிக்கையைக்கூட நிறைவேற்றவில்லை.

ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி

மக்களின் கோரிக்கைகளை மக்கள் மன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் கொண்டு வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளாக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு திமுக அரசு நிதி பெறவில்லை, தமிழகத்தின் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டுப் பெறவில்லை.

பிரதமர், மத்திய அமைச்சர்களை அழைத்து விழா நடத்தும் திமுக-வினர், அவர்களிடம் தமிழகத்திற்கு தேவையான நிதிகளை கேட்டு பெறுவதில்லை. 100 நாள் வேலை திட்ட நிதியைக் கூட மத்திய அரசிடமிருந்து திமுக அரசு பெற முடியவில்லை. தமிழகத்தில் திரும்பிய திசையெங்கும் கருணாநிதி எனும் பெயரையும், அவரது சிலையையும் வைப்பதற்காக மட்டும் முதலமைச்சராக ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் உரிமை போராட்டம் நடத்தினார். டங்ஸ்டன் திட்டம் ரத்தானது மக்களின் வெற்றி.

அதிமுக-வில் உள்ள இரண்டு கோடி தொண்டர்களின் கருத்துகள் அதிகாரபூர்வ கருத்தாக இருக்காது, பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்தததில் எவ்விதமான மாற்றமும் இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 'யார் அந்த சார், யார் அந்த கார்' என திமுக அரசுதான் விளக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் உண்மையான சுதந்திரம் இல்லை. இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை தொடங்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

கூட்டணி குறித்த முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

கலெக்டரிடம் மனு அளித்தபோது

திருப்பரங்குன்றம் கோயில் வழிபாடு குறித்த பிரச்னையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும், திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலை விவாகரத்தில் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கிறது. இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரராக உள்ளார்கள். சர்ச்சையை கிளப்பி விட்ட சார் யார்?

இந்தியா முழுக்க மதக் கலவரம் பற்றி எரிந்தபோது ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. தற்போது திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாக இல்லாத அளவில் ஏன் இந்த சர்ச்சை? இதன் மூலம் என்ன லாபத்தை அரசு எதிர்பார்க்கிறது?

மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் ,மத நல்லிணக்கம் பேணும் தமிழ்நாட்டில் திருப்பங்குன்றம் முதல் படையாக உள்ளது. மத நல்லிணக்கத்துடன் மதுரை மக்கள் வாழ்கிறார்கள். இந்து, முஸ்லிம் கிறிஸ்தவ சகோதரர்கள் யாருக்கும் பிரச்னை எழவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்கள் புதிதாக பிரச்னை எழுப்புகிறார்கள். இது மக்களுக்கோ, சமூக நல்லிணத்திற்கோ, எதிர்காலத்திற்கோ நல்லதல்ல... அவரவர் மத நம்பிக்கையை அவரவர் கடைபிடித்து கொள்ளலாம் என்று அரசியல் சட்டம் கூறியுள்ளது. இதில் அரசு வேடிக்கை பார்க்கிறது.

ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி, அதிமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக யார் ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் எந்த மூலையில் இருந்தாலும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம். தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் விரைவில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்க உள்ளார்" என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.